கடமைகளை உதவிகளாக நினைத்து செய்யாதீர்கள்: நடிகர் சங்க நிர்வாகிகளுக்கு சூர்யா அறிவுறுத்தல்

கடமைகளை உதவிகளாக நினைத்து செய்யாதீர்கள்: நடிகர் சங்க நிர்வாகிகளுக்கு சூர்யா அறிவுறுத்தல்
Updated on
1 min read

கடமைகளை, உதவிகளாக நினைத்து செய்யாதீர்கள் என்று நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளுக்கு நடிகர் சூர்யா அறிவுரை வழங்கியுள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் பாண்டவர் அணியில் சார்பில் போட்டியிட்ட நாசர், விஷால், கார்த்தி, கருணாஸ், பொன்வண்ணன் அனைவருமே வெற்றி பெற்றார்கள். விரைவில் பதவியேற்பு விழா நடைபெற இருக்கிறது.

இந்நிலையில், நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற பாண்டவர் அணிக்கு நடிகர் சூர்யா வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அவர் எழுதியுள்ள கடிதத்தில் "இந்தத் தேர்தல் நமக்கு பல பாடங்களைக் கற்றுத் தந்திருக்கிறது. தேர்தலுக்காக நடந்த பிரச்சாரத்தில், வருந்ததக்க பல விஷயங்கள் அரங்கேறின. விமர்சனங்கள் எனும் பெயரில் தனிமனித தாக்குதல் நடந்தன. சமாதான முயற்சிகள் தோல்வியுற்றன.

பொறுப்பில் இருக்கும்போது செய்த 'கடமைகள்', 'உதவிகளாக' சித்தரிக்கப்பட்டன. 'நடிகர்கள் ஒரே குடும்பம்' என்று சொல்லிக் கொண்டே ஜாதி, மொழி, இனத்தின் பெயரால் பிரிவினை பேசப்பட்டது. படத்தின் வெற்றி தோல்விகளை வைத்து கேலி செய்தனர். விருப்பப்பட்டவர்களுக்கு ஆதரவு தெரிவித்த காரணத்தால், மதிப்புக்கும், மரியாதைக்கும் உரிய மூத்த கலைஞர்கள் மீது, 'பண்பு மறந்து, வார்த்தை தடித்து' அவதூறுகள் வீசப்பட்டன. இத்தகைய சூழல் இனி ஒருபோதும் வராமல் தடுப்பது நம் அனைவரின் பொறுப்பு.

வெற்றி பெற்ற புதிய பொறுப்பாளர்களுக்கு, சக கலைஞனாக என்னுடைய வேண்டுகோள் இவை:

கடமைகளை, உதவிகளாக நினைத்து செய்யாதீர்கள். மூத்த கலைஞர்களை எப்படி நடத்த வேண்டும் என்பதில் முன்னுதாரணமாக இருங்கள். அனைத்து கலைஞர்களுக்கு நன்மை கிடைக்க பாடுபடுங்கள். கொடுத்த வாக்குறுதிகளை இதயத்திலிருந்து நிறைவேற்றுங்கள்.

பகைமை விரட்டி, ஒற்றுமைக்கு வித்திடுங்கள். சககலைஞர்கள் உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையும் எதிர்பார்ப்புமே, உங்களின் உண்மையான வெற்றி, நடிகர்கள் மற்றும் திரைத்துறையின் வளர்ச்சிக்கும் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்" என்று அக்கடிதத்தில் தெரிவித்திருக்கிறார் சூர்யா.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in