

'இது நம்ம ஆளு' பார்த்துவிட்டு சிம்பு அளித்த உத்தரவாதத்தால் மிகவும் சந்தோஷத்தில் இருக்கிறார் இயக்குநர் பாண்டிராஜ்.
பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா, சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'இது நம்ம ஆளு'. குறளரசன் இசையமைத்திருக்கும் இப்படத்துக்கு பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். முதல் பிரதி அடிப்படையில் டி.ராஜேந்தர் வழங்க, பாண்டிராஜ் தயாரித்து வருகிறார்.
நீண்ட நாட்களாக இப்படம் தயாரிப்பில் இருந்து வருகிறது. மற்ற காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்துவிட்டாலும், இன்னும் 2 பாடல்கள் மட்டும் காட்சிப்படுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன்னர் பாண்டிராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் "'இது நம்ம ஆளு' வெளியீடு என்பது என் கையில் இல்லை. தயாரிப்பாளர் தான் முடிவு செய்ய வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து சிம்பு, தான் படத்தைப் பார்க்க விரும்புவதாக இயக்குநர் பாண்டிராஜுக்குப் போனில் தெரிவித்திருக்கிறார். அதற்கான ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார் பாண்டிராஜ்.
முழுப்படத்தையும் தனது நண்பர்களுடன் பார்த்த சிம்பு, முடிவில் மிகவும் மகிழ்ந்து போய்விட்டாராம். எதுவுமே சேர்க்க வேண்டாம், அப்படியே வெளியிடலாம் மிகவும் சூப்பராக இருக்கிறது என்று சிம்புவும் அவருடைய நண்பர்களும் தெரிவித்திருக்கிறார்கள்.
இயக்குநர் பாண்டிராஜிடம், படம் அற்புதமாக இருக்கிறது, விரைவில் வெளியிட பணிகளைத் துரிதப்படுத்துவதாக சிம்பு உத்திரவாதம் அளித்திருக்கிறார். சிம்புவின் இப்பேச்சு பாண்டிராஜுக்கு மிகவும் சந்தோஷத்தை அளித்திருக்கிறது.
தீபாவளி முடிந்தவுடன் இசை வெளியீடு, டிசம்பரில் படம் வெளியீடு என்று பரபரப்பாக பணியாற்றி வருகிறார்கள்.