‘கோச்சடையான்’ மே 23-ல் ரிலீஸாகுமா?

‘கோச்சடையான்’ மே 23-ல் ரிலீஸாகுமா?
Updated on
1 min read

‘கோச்சடையான்’ திரைப்படம் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி மே 23-ம் தேதி ரிலீஸாகுமா என்பதில் தொடர்ந்து குழப்பம் நிலவுகிறது. சென்னை உள்பட தமிழகத்தின் பல நகரங்களிலும் இன்னும் முன்பதிவு தொடங்கப்படாததால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

ரஜினிகாந்த் நடிப்பில் அவரது மகள் சவுந்தர்யா இயக்கியுள்ள படம் ‘கோச்சடையான்’. ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்த படத்தை கடந்த மே 9-ம் தேதி வெளியிடத் திட்டமிட்டு திரையரங்குகளில் முன்பதிவும் தொடங்கப்பட்டது. மொத்தம் 6 ஆயிரம் பிரின்ட்கள் போட்டு உலகம் முழுவதும் 3 ஆயிரத்துக்கும் மேலான திரையரங்குகளில் திரையிடத் திட்டமிடப்பட்டிருந்தது.

இந்த சூழ்நிலையில், தொழில்நுட்பக் காரணங்களால் ‘கோச்சடையான்’ ரிலீஸ் மே 23-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுவதாக தயாரிப்புத் தரப்பில் கூறப்பட்டது. தனியார் வங்கியில் பெற்ற கடனை திருப்பிச் செலுத்துவதில் சிக்கல் நீடிப்பதாகவும் தகவல் வெளியானது.

வெளிநாட்டு ரிலீஸ் தீவிரம்

இந்நிலையில், உள்நாட்டில் வெளியிடுவதில் உள்ள சிக்கல் எளிதில் தீர்ந்துவிடும் என்ற நம்பிக்கையில், வெளிநாடுகளில் இப்படத்தை வெளியிடும் எஃப்.எம்.எஸ். உரிமம் தொடர்பான வேலைகள் தற்போது நடந்து வருகிறது. வெளிநாட்டுக்கு பிரின்ட்களை அனுப்புவதற்கான பணிகளும் நடந்து வருகிறது.

படத்தின் ரிலீஸ், முன்பதிவு பணிகள் குறித்து கேட்டபோது சென்னையில் உள்ள திரையரங்க உரிமையாளர் ஒருவர், ‘‘செவ்வாய்க்கிழமை மாலை முதல் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளோம். படம் வெளியாவது குறித்து உறுதியான தகவல் புதன்கிழமை (இன்று) தெரிய வரும்’’ என்றார்.

அதிக அட்வான்ஸ் என புகார்

மற்றொரு திரையரங்க உரிமை யாளர் கூறுகையில், ‘‘இன்னும் முன்பதிவு தொடங்கவில்லை. படம் ரிலீஸாவது உறுதியானதும் முன்பதிவு தொடங்கப்படும். முன்புபோலவே மீண்டும் தேதியை மாற்றினால், முன்பதிவு தொகையை திருப்பிக் கொடுப்பது சிரமமாக உள்ளது. படத்தின் பிரின்ட் விலையும் அதிகமாக சொல்கிறார்கள். ஒவ்வொரு படம் வெளியாகும் முன்பு அட்வான்ஸ் என்ற பெயரில் ஒரு தொகை கொடுப்பது வழக்கம். அந்த தொகையை அதிகமாகக் கேட்கிறார்கள். அதுபற்றியும் பேசி வருகிறோம். இதெல்லாம் முடிவுக்கு வந்தால், டிக்கெட் முன்பதிவு வேலைகளைத் தொடங்குவோம்’’ என்றார்.

குறிப்பாக சென்னையில் அபிராமி, தேவி காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட சில திரையரங்குகளைத் தவிர மற்ற திரையங்குகள் செவ்வாய்க்கிழமை மாலை வரை முன்பதிவு தொடங்கவில்லை. சத்யம் திரையங்கத்தில் செவ்வாய்க்கிழமை வரை டிக்கெட் முன்பதிவு நடைபெறவில்லை. மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட நகரங்களிலும் முன்பதிவு தொடங்கவில்லை.

‘கோச்சடையான்’ படத்துக்காக வங்கியில் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தியதற்கான ஒப்புதல் கடிதம் புதன்கிழமை (இன்று) கிடைத்தால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி மே 23-ல் படம் ரிலீஸாகும். திரையரங்குகளில் இன்று முன்பதிவு தொடங்கும் என்று கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in