

தனது உடல் எடையைக் குறைத்தவுடன் எடுக்கப்பட்ட போட்டோ ஷூட் படங்களை வெளியிட்டுள்ளார் சிம்பு.
கரோனா அச்சுறுத்தலால் எந்தவொரு படத்தின் படப்பிடிப்பும் நடைபெறவில்லை. இதனைப் பயன்படுத்தி பல்வேறு நடிகர்கள் தங்களுடைய உடலமைப்பை மாற்றினார்கள். இதில் சிம்புவும் ஒருவர். தனது உடலமைப்பை மாற்றும்போது, எந்தவொரு வீடியோ, புகைப்படத்தையும் சிம்பு வெளியிடவில்லை.
சென்னையிலிருந்து கேரளாவுக்குச் சென்று அங்கும் தீவிரமாக உடற்பயிற்சி செய்து வந்தார். சுமார் 30 கிலோ வரை உடல் எடையைக் குறைத்து, மிகவும் ஸ்லிம்மாக மாறியுள்ளார் சிம்பு. தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஈஸ்வரன்' படத்தில் நடித்து வருகிறார். அதன் ஃபர்ஸ்ட் லுக்கில்தான் சிம்புவின் உடல் எடை குறைந்த லுக் வெளியானது.
தற்போத போட்டோ ஷூட் படங்களை ட்விட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளார் சிம்பு. அத்துடன் சிம்பு கூறியிருப்பதாவது:
"இந்த உருமாற்றத்தில் எனக்கு முழுவதும் உதவிய, வழிகாட்டிய எல்லாம் வல்ல பெரும் சக்திக்கு என் நன்றிகள். என் மீது நிபந்தனையற்ற அன்பு காட்டும் என் அத்தனை ரசிகர்களுக்கும் நன்றிகள். உங்கள் அன்பு இந்த உலகத்துக்கு ஈடானது. எனக்கு உறுதுணையாக இருந்து படிப்படியாக நான் குணமடைய உதவிய பயிற்சியாளர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ஒரு பெரிய இறுக்கமான ஹக்".
இவ்வாறு சிம்பு தெரிவித்துள்ளார்.
இந்த போட்டோ ஷூட் படங்கள் சிம்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.