

'திரெளபதி' இயக்குநர் மோகன்.ஜியின் அடுத்த படம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மோகன்.ஜி இயக்கத்தில் ரிஷி ரிச்சர்ட், ஷீலா நடிப்பில் வெளியான படம் 'திரெளபதி'. மனோஜ் நாராயண் ஒளிப்பதிவு செய்திருந்த இந்தப் படத்துக்கு ஜுபின் இசையமைத்திருந்தார். கூட்டு நிதி முயற்சியில் இயக்குநர் மோகனே தயாரித்திருந்தார். இந்தப் படத்தின் ட்ரெய்லர் உருவாக்கிய சர்ச்சையால், பெரும் எதிர்பார்ப்பு உருவானது.
1 கோடி ரூபாய்க்கும் குறைவான பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இந்தப் படம் ரூ.10 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. இந்தப் படத்தில் முதலீடு செய்த அனைவருக்குமே 3 மடங்கு லாபம் சம்பாதித்துக் கொடுத்தது. இதனால், மோகன்.ஜியின் அடுத்த படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவானது.
மீண்டும் ரிஷி ரிச்சர்ட் நாயகனாக நடிக்கும் படத்தை இயக்கவுள்ளதை மோகன்.ஜி உறுதிப்படுத்தினார். கரோனா ஊரடங்கினால் இந்தப் படத்தின் அறிவிப்பை தள்ளிவைத்திருந்தார். இன்று (அக்டோபர் 25) சரஸ்வதி பூஜையை முன்னிட்டு, படத்துக்குப் பூஜை போட்டு தலைப்பை அறிவித்துள்ளார் மோகன்.ஜி
'ருத்ர தாண்டவம்' என்ற பெயரில் உருவாகும் இந்தப் படத்தில் ரிஷி ரிச்சர்ட் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 'திரெளபதி' படத்தை தயாரித்த ஜி.எம் பிலிம் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாத இறுதியில் துவங்கவுள்ளது. 2021-ம் ஆண்டு மே மாதம் 'ருத்ர தாண்டவம்' வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
ரிச்சர்ட் உடன் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. ஒளிப்பதிவாளராக பரூக், இசையமைப்பாளராக ஜூபின் பணிபுரியவுள்ளனர். 'திரெளபதி' படத்தை வெளியிட்ட 7ஜி ஃபிலிம்ஸ் சிவா, தற்போதே இந்தப் படத்தின் ஒட்டுமொத்த வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றியுள்ளார்.