'தளபதி 65' படத்திலிருந்து விலகினார் ஏ.ஆர்.முருகதாஸ்: பின்னணி என்ன?

'தளபதி 65' படத்திலிருந்து விலகினார் ஏ.ஆர்.முருகதாஸ்: பின்னணி என்ன?
Updated on
1 min read

'தளபதி 65' படத்தின் இயக்குநர் பொறுப்பிலிருந்து விலகியுள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ். இதன் பின்னணி என்ன என்பது குறித்துத் தகவல் வெளியாகியுள்ளது.

'துப்பாக்கி', 'கத்தி' மற்றும் 'சர்கார்' ஆகிய படங்களைத் தொடர்ந்து விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் இருவரும் 4-வது முறையாக இணைந்து பணிபுரிய ஒப்பந்தமானார்கள். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இதன் பணிகள் மும்முரமாகத் தொடங்கி நடைபெற்று வந்தன.

கரோனா அச்சுறுத்தலால் இதன் பணிகளில் கொஞ்சம் தாமதம் ஏற்பட்டது. அப்போது திரைக்கதையின் இறுதி வடிவத்தைத் தயார் செய்துக் கொண்டிருந்தார் ஏ.ஆர்.முருகதாஸ். சில தினங்களுக்கு முன்பு விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் இருவரும் சந்தித்துப் பேசினார்கள்.

அப்போது கதை, திரைக்கதையின் வடிவம், வசனங்கள் உள்ளிட்ட அனைத்தையும் முருகதாஸ் முழுமையாகச் சொல்லியிருக்கிறார். அதைக் கேட்ட விஜய்க்கு பரமதிருப்தி. ஆனால், விஜய் படம் என்பதால் சன் பிக்சர்ஸ் நிறுவனமும் முழுமையாகக் கதையைக் கேட்டுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் சொன்ன கதை, சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்குத் திருப்தி அளிக்கவில்லை.

அப்போது, பல விஷயங்களை மாற்றச் சொல்லியிருக்கிறார்கள். அதை மாற்ற முடியாது என்பதில் ஏ.ஆர்.முருகதாஸ் தீவிரமாக இருந்திருக்கிறார். இறுதியில், 'தளபதி 65' இயக்குநர் பொறுப்பிலிருந்து தான் விலகிக் கொள்வதாக ஏ.ஆர்.முருகதாஸ் கூறிவிட்டுச் சென்றுள்ளார். இந்தச் சம்பவம் 5 நாட்களுக்கு முன்புதான் நடந்தது என்கிறார்கள்.

'தளபதி 65' படம் குறித்து பெரும் எதிர்பார்ப்பு நிலவிவந்த வேளையில், ஏ.ஆர்.முருகதாஸின் விலகல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இயக்குநர் யார் என்பது குறித்துப் பல்வேறு தகவல்கள் வெளியானாலும், விஜய்யோ இன்னும் யாரிடமும் கதையைக் கேட்டு இறுதி செய்யவில்லை. 'மாஸ்டர்' இன்னும் வெளியாகவில்லை என்பதால் அவசரம் காட்ட வேண்டாம் என்று விஜய் சொல்லியிருக்கிறார்.

'தளபதி 65' படத்துக்காகப் பல்வேறு இயக்குநர்களிடம் கதைகள் கேட்டார் விஜய். அதில் தனக்குப் பிடித்த கதைகளைச் சொன்ன இயக்குநர்களை மீண்டும் அழைத்துப் பேசவுள்ளார். இந்தச் சந்திப்புகள் எல்லாம் தீபாவளிக்குப் பிறகுதான் நடக்கவுள்ளது. ஆகையால், 'தளபதி 65' குறித்த அறிவிப்பு வெளியாக இன்னும் தாமதமாகலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in