

தடையில்லாச் சான்றிதழ் கிடைத்ததைத் தொடர்ந்து, 'சூரரைப் போற்று' படம் தீபாவளிக்கு வெளியாகும் எனத் தெரிகிறது.
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'சூரரைப் போற்று' திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் அக்டோபர் 30-ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. எந்தவொரு விளம்பரப்படுத்தும் பணிகளும் தொடங்கப்படாமல் இருந்தது.
அப்போது தான், விமானப்படை தரப்பிலிருந்து தடையில்லாச் சான்றிதழ் வருவது தாமதமாகிறது. அது வந்தால் மட்டுமே படம் வெளியீடு என்று தகவல் வெளியானது. இந்தத் தகவல் வெளியான அடுத்த நாளே, 'சூரரைப் போற்று' வெளியீடு தாமதம் தொடர்பான தனது வருத்தத்தை அறிக்கையாக வெளியிட்டார் சூர்யா.
தற்போது, 'சூரரைப் போற்று' படத்துக்குத் தடையில்லாச் சான்றிதழ் கிடைத்துவிட்டது. இதனால் உற்சாகமாக படத்தின் வெளியீட்டுப் பணிகளைத் தொடங்கிவிட்டது படக்குழு. ட்ரெய்லர் வெளியீடு, இதர பாடல்கள் வெளியீடு குறித்த திட்டமிடல்கள் நடைபெற்று வருகின்றன.
தீபாவளி வெளியீடாக 'சூரரைப் போற்று' படம் இருக்கட்டும் என அமேசான் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதனால் சூர்யா ரசிகர்கள் பெரும் உற்சாகமாகியுள்ளனர்.