

'சூரரைப் போற்று' வெளியீடு தாமதம் ஆனதற்கான பின்னணி குறித்து நடிகர் சூர்யா அறிக்கை வெளியிட்டுள்ளார்
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'சூரரைப் போற்று' திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் அக்டோபர் 30-ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
ஆனால், தற்போது வரை விளம்பரப்படுத்தும் பணிகள் எதுவுமே தொடங்கப்படவில்லை. இதுவே, சமூக வலைதளத்தில் பெரும் சந்தேகத்தை உருவாக்கியது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக அமேசான் நிறுவனம் கடந்த அக்டோபர் 21 வெளியிட்ட இந்த மாதத்துக்கான படங்கள் வெளியீட்டுப் பட்டியலில் 'சூரரைப் போற்று' படத்தின் பெயர் இடம்பெறவில்லை. இதனால் சூர்யா ரசிகர்கள் கடும் அதிருப்திக்கு ஆளாயினர்.
இந்நிலையில் 'சூரரைப் போற்று' வெளியீடு தாமதம் ஆனதற்கான பின்னணி குறித்து நடிகர் சூர்யா ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
என்னுடைய எண்ணங்களை உங்களிடம் வெளிப்படுத்த எப்போதுன் கடிதங்களை நான் தேர்ந்தெடுப்பதில்லை. ஆனால் இது போன்ற கடினமான காலகட்டத்தில், திறந்த மனதுடனும், வெளிப்படைத்தன்மையுடனும் நான் உங்கள் முன் நின்று கொண்டிருக்கும் நிலை உருவாகியுள்ளது. ஏனெனில் நான் இப்போது இருக்கும் நிலைக்கு வர என்னுடன் உறுதுணையாக நின்றது நீங்கள்தான்.
நாங்க ‘சூரரைப் போற்று’ படத்தை தொடங்கிய போது புது இடங்களில் படப்பிடிப்புவதும், பல்வேறு மொழி பேசும் மக்களுடன் பணிபுரிவது, மாறாவின் உலகத்துக்குள் பலவகையான திறன்களை கொண்டவர்களை கொண்டு வருவது ஆகிய விஷயங்கள் மட்டுமே சவாலாக இருக்கும் என்று நினைத்தோம். சொல்வதற்கு எளிதாக இருந்தாலும், இதை செயல்படுத்துவது பூதாகரமாக இருந்தது.
‘சூரரைப் போற்று’ திரைப்படம் விமானத் துறையை பற்றியது என்பதை நீங்கள் அறிவீர்கள். எனவே இது நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விஷயம் எனபதாலும், உண்மையான விமானப் படை விமானங்களையும் பயன்படுத்தியதாலும் நாங்கள் ஏராளமான அனுமதிகளை பெற வேண்டியிருந்தது. இன்னும் சில அனுமதிகள் நிலுவையில் இருப்பதால், இது போன்ற தருணத்தில நாட்டின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு இப்படத்துக்கான காத்திருப்பு தவிர்க்க முடியாததாக ஆகிறது.
நம் இதயத்துக்கு நெருக்கமான ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தின் கதை ஈர்க்கக் கூடியதாகவும், ஆர்வத்தை தூண்டுக் கூடியதாகவும் உள்ளது. துரதிர்ஷ்டவசமாக, இப்படத்தின் வெளியீடு எதிர்பார்த்ததை விட இன்னும் சற்று அதிகம் நீட்டிக்கப்படுகிறது.
எனினும், என்னுடைய நலம் விரும்பிகள் இப்படத்தை எவ்வளவு ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள், ஆனால் எங்களிடம் வேறு மாற்றுவழி இல்லை என்பதை நினைக்கையில் வலிக்கிறது. என்னுடைய நலம் விரும்பிகள் இதை அன்புடனும், நம்பிக்கையுடனும் நேர்மறையாக எடுத்துக் கொள்வார்கள் என்று தனிப்பட்ட முறையில் நம்புகிறேன்.
விரைவில் ட்ரெய்லர் மற்றும் இன்னபிற விஷயங்களுடன் உங்களிடம் வருகிறோம். இந்த கடிதத்துடன் நமது நட்பு மற்றும் பிணைப்புக்காக ஒரு ‘ஃப்ரெண்ட்ஷிப்’ பாடலும் வெளியாகிறது.’
இவ்வாறு சூர்யா கூறியுள்ளார்.