

டிசம்பர் மாதம் முதல் ரஜினி மற்றும் ராதிகா ஆப்தே சம்பந்தப்பட்ட காட்சிகளை காட்சிப்படுத்த 'கபாலி' படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.
ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, கிஷோர், ருத்விகா, கலையரசன், தன்ஷிகா உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் 'கபாலி'. சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வரும் படத்தை தாணு தயாரித்து வருகிறார்.
சென்னையில் பல்வேறு இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. சென்னை படப்பிடிப்பைத் தொடர்ந்து படக்குழு மலேசியாவுக்கு சென்றிருக்கிறது. அங்கு சுமார் ஒரு மாதம் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.
இதுவரை ரஜினி - தன்ஷிகா சம்பந்தப்பட்ட காட்சிகள் மற்றும் ரஜினியின் காட்சிகள் மட்டுமே காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். ரஜினிக்கு மனைவியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கும் ராதிகா ஆப்தே காட்சிகள் எதுவுமே இதுவரை காட்சிப்படுத்தவில்லை. போட்டோ ஷூட்டில் மட்டுமே இதுவரை ராதிகா ஆப்தே கலந்து கொண்டிருக்கிறாரர்.
இந்நிலையில் ரஜினி - ராதிகா ஆப்தே காட்சிகளின் திட்டம் குறித்து படக்குழுவிடம் கேட்ட போது, "முதலில் ரஜினி, தன்ஷிகா மற்றும் பல்வேறு முக்கிய காட்சிகள் தான் திட்டமிட்டோம். ராதிகா ஆப்தேவின் காட்சிகள் டிசம்பரில் தான் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு இருக்கிறோம். டிசம்பர் 1ம் தேதி முதல் ரஜினியுடனான ராதிகா ஆப்தே காட்சிகளின் படப்பிடிப்பு இருக்கும்" என்று தெரிவித்தார்கள்.