நவம்பர் 26ம் தேதி ராகுல்சர்மா - அசின் திருமணம்

நவம்பர் 26ம் தேதி ராகுல்சர்மா - அசின் திருமணம்
Updated on
1 min read

பிரபல செல்போன் நிறுவன அதிபர் ராகுல் சர்மா மற்றும் நடிகை அசின் இருவருக்குமான திருமணம் நவம்பர் 26ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு.

'எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி' படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை அசின். அப்படத்தைத் தொடர்ந்து 'சிவகாசி', 'மஜா', 'வரலாறு', 'போக்கிரி', 'கஜினி' உள்ளிட்ட பல்வேறு படங்களில் நாயகியாக நடித்திருக்கிறார். 'கஜினி' இந்தியில் ரீமேக் செய்யப்பட்ட போது தமிழில் நடித்த அதே பாத்திரத்தில் இந்தியிலும் நடித்தார்.

'கஜினி' இந்தி ரீமேக்கைத் தொடர்ந்து, இந்தியில் பல வாய்ப்புகள் வரவே அங்கேயே நடித்து வந்தார். அப்போது பிரபல செல்போன் நிறுவன அதிபர் ராகுல் சர்மாவுக்கும் அசினுக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் காதலாக மாறியது. இருவீட்டாரும் காதலுக்கு சம்மதம் தெரிவித்தார்கள்.

தற்போது ராகுல் சர்மா - அசின் இருவரின் திருமணம் நவம்பர் 26ம் தேதி நடைபெறும் என அறிவித்திருக்கிறார்கள். டெல்லியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் இத்திருமணம் நடைபெற இருக்கிறது. திருமணத்துக்கு இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த உறவினர்கள் மட்டுமே அழைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

நவம்பர் 27ம் தேதி டெல்லியில் உள்ள பண்ணை வீட்டில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் இந்தி திரையுலகின் முன்னணி நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நவம்பர் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் மும்பையிலும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in