

எல்லோருக்கும் பிடித்த ஹீரோவாக இருப்பது சாதாரணமில்லை. இந்த நடிகரைப் பிடித்தால், அந்த நடிகரைப் பிடிக்காது என்றெல்லாம் கட்சி பிரித்துக்கொள்கிற சமயத்தில், எல்லோருக்கும் பிடித்த ஹீரோவாக இருந்தவர் நடிகர் மோகன். பாலுமகேந்திராவால் ‘கோகிலா’ எனும் கன்னடப்படத்தின் மூலம் நடிக்கத் தொடங்கியவர், அடுத்தடுத்து தமிழுக்கு வந்தார். தனக்கென தனி ராஜ்ஜியத்துடன் வசூல் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்தார்.
பாலுமகேந்திராவின் ‘மூடுபனி’, மகேந்திரனின் ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’, துரையின் ‘கிளிஞ்சல்கள்’ என்று எல்லாப் படங்களும் இருநூறு நாள், முந்நூறு நாள், ஐநூறு நாள் படங்கள். ஆர்.சுந்தர்ராஜனின் ‘பயணங்கள் முடிவதில்லை’ இன்னொரு பாய்ச்சலுக்கான படமாக அமைந்தது.
ஒருபக்கம் ஆர்.சுந்தர்ராஜனின் படங்கள், இன்னொரு பக்கம் மணிவண்ணனின் படங்கள், மனோபாலாவின் படங்கள், கே.ரங்கராஜ் இயக்கத்தில் வந்த படங்கள் என தொடர்ந்து படங்கள் வந்துகொண்டே இருந்தன. வெற்றிகள் குவிந்துகொண்டே இருந்தன. இந்தசமயத்தில் இயக்குநர் இராம.நாராயணனின் படங்களிலும் நிறையவே நடித்தார் மோகன்.
மோகன் தயாரிப்பாளர்களின் நடிகரானார். இயக்குநர்களின் நடிகரானார். ரசிகர்களின் நடிகரானார். மெல்லிய உணர்வுகளையும் மென் சோகங்களையும் தன் முகபாவங்களால் காட்டக்கூடியவர் எனும் பேர் கிடைத்தது மோகனுக்கு. முக்கியமாக, எஸ்.பி.பி.யோ மலேசியா வாசுதேவனோ எஸ்.என்.சுரேந்தரோ, தீபன் சக்கரவர்த்தியோ யார் பாடினாலும் அந்தப் பாடல்களுக்கு தன் முகபாவத்தாலும் வெள்ளந்திச் சிரிப்பாலும் தத்ரூபம் காட்டினார். மைக்கைப் பிடித்து இவர் நடித்தாலே ரசிகர்கள் கரவொலி எழுப்பத் தொடங்கினார்கள்.
மோகன் கால்ஷீட்டுக்காக காத்திருந்த படங்களெல்லாம் உண்டு. மோகன் நடிக்கிறார், இளையராஜா இசையமைக்கிறார் என்றாலே படம் பூஜை போடும் போதே, அத்தனை ஏரியாக்களும் விற்றுவிடும். அதுவும் சொன்ன விலைக்கு விற்றுவிடும் என்பதுதான் எண்பதுகளின் ஹாட் டாபிக்.
84ம் ஆண்டில், ஏகப்பட்ட படங்கள் வந்தன மோகனுக்கு. ’அன்பே ஓடி வா’, ‘அம்பிகை நேரில் வந்தாள்’, ‘நூறாவது நாள்’, இருபத்து நான்கு மணி நேரம்,’உன்னை நான் சந்தித்தேன்’, ’ஓசை’, ’நலம் நலமறிய ஆவல்’, ‘நிரபராதி’ , ‘நெஞ்சத்தை அள்ளித்தா’, ’மகுடி’, ‘ருசி’, ‘வாய்ப்பந்தல்’, ’விதி’ , ‘சாந்தி முகூர்த்தம்’, ‘ஓ மானே மானே’ என்று வரிசையாக படங்கள் வந்தன.
இதில் ‘ஓ மானே மானே’ திரைப்படத்தை இயக்குநர் ஏ.ஜெகநாதன் இயக்கினார். எம்ஜிஆரை வைத்து பல படங்களை இயக்கியவர் இவர். கமலை வைத்து ‘காதல் பரிசு’, ரஜினியை வைத்து ‘தங்கமகன்’ உள்ளிட்ட பல படங்களை இயக்கினார். பிலிம்கோ நிறுவனம் தயாரித்த இந்தப் படத்தில், மோகன், ஊர்வசி முதலானோர் நடித்தார்கள்.
இளையராஜா இசையமைத்த இந்தப் படத்தில், எல்லாப் பாடல்களும் வெற்றி பெற்றன. முக்கியமாக, ‘பொன்மானைத் தேடுதே என் வீணை பாடுதே’ என்ற பாடல் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன. இந்தப் பாடலுக்கு மோகன் நடித்தார். இந்தப் பாடலைப்பாடியவர் கமல்ஹாசன்.
தன் நண்பர் தசரதன் இயக்கத்தில் வெளியான ‘சரணம் ஐயப்பா’ படத்துக்காக மனோரமா ஆச்சியின் மகன் பூபதி முதலானோர் பாடுகிற ‘ஏ அண்ணா வாடா ஏ தம்பி வாடா’ என்ற பாடலை கமல் பாடிக் கொடுத்தார்.
இதேபோல், பின்னாளில், இயக்குநர் ஜேடி - ஜெர்ரி இயக்கத்தில், கார்த்திக் ராஜா இசையில், அஜித்தும் விக்ரமும் இணைந்து நடித்த ‘உல்லாசம்’ படத்தில், ‘முத்தே முத்தம்மா முத்தம் ஒண்ணு தரலாமா’ என்ற பாடலை கமல் பாட, அதற்கு அஜித் நடித்தார். 84ம் ஆண்டு மோகன் நடித்து, இளையராஜா இசையில் வெளியான ‘ஓ மானே மானே’ எனும் திரைப்படத்தில் ‘பொன்மானைத் தேடுதே’ என்ற பாடலை கமல் பாடிக்கொடுக்க, மோகன் வாயசைத்து நடித்தார்.
பாலு மகேந்திராவின் கன்னடப் படமான ‘கோகிலா’தான் பாலுமகேந்திரா இயக்கிய முதல் படம். இந்தப் படம் மோகனுக்கும் முதல் படம். ‘கோகிலா’ படத்தின் நாயகன் கமல்ஹாசன். இருவரும் இணைந்து நடித்தார்கள். பின்னர், ‘ஓ மானே மானே’ படத்தில் மோகன் நடிக்க, கமல் பாட... என்று வித்தியாசக் கூட்டணியாக அமைந்தது.
84ம் ஆண்டு அக்டோபர் 22ம் தேதி ‘ஓ மானே மானே’ வெளியானது. படம் வெளியாகி, 36 ஆண்டுகளாகின்றன. கமல் பாடிய ‘பொன்மானைத் தேடுதே என் வீணை பாடுதே’ என்ற மோகனுக்கான பாடலை கேட்டுப் பாருங்கள். புது சுகானுபவமாக உணருவீர்கள்.