

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'சூரரைப் போற்று' படத்தின் வெளியீடு தாமதமாகும் எனத் தெரிகிறது.
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'சூரரைப் போற்று' திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் அக்டோபர் 30-ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
ஆனால், தற்போது வரை விளம்பரப்படுத்தும் பணிகள் எதுவுமே தொடங்கப்படவில்லை. இதுவே, சமூக வலைதளத்தில் பெரும் சந்தேகத்தை உருவாக்கியது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக அமேசான் நிறுவனம் இன்று (அக்டோபர் 21) வெளியிட்ட இந்த மாதத்துக்கான படங்கள் வெளியீட்டுப் பட்டியலில் 'சூரரைப் போற்று' படத்தின் பெயர் இடம்பெறவில்லை.
இது தொடர்பாக விசாரித்தபோது, '' 'சூரரைப் போற்று' படத்துக்கு இந்திய அரசாங்கத்திடமிருந்து ஒப்புதல் கடிதம் வர வேண்டியதுள்ளது. அது வந்தால் மட்டுமே விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டு, அக்டோபர் 30-ம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகும்.
இந்தியாவில் முதல் பட்ஜெட் விமானப் பயணத்தை உருவாக்கியவர் ஜி.ஆர்.கோபிநாத். அவருடைய வாழ்க்கையை மையப்படுத்தியே இப்படம் உருவாகியுள்ளது. ஆகையால், இந்திய விமானப் படை தரப்பிலிருந்து ஒப்புதல் வருவதற்காக படக்குழு காத்திருக்கிறது. நாளைக்குள் (அக்டோபர் 22) வந்துவிடும் ஒன்றும் பிரச்சினை இருக்காது என்கிறது படக்குழு.
இதில் தாமதம் ஏற்பட்டால், அக்டோபர் 30-ம் தேதி 'சூரரைப் போற்று' திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகாது. இந்திய விமானப் படை ஒப்புதல் கடிதம் கிடைத்தவுடனேதான் புதிய வெளியீட்டுத் தேதியை முடிவு செய்வார்கள் எனத் தெரிகிறது.