

விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பு தேவைப்படும்போது அரசியல் கட்சியாக மாறும் என்று இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய விஜய் படங்கள் வெளியாகும்போது, அதிலுள்ள அரசியல் ரீதியான கருத்துகளை வைத்து விவாதம் நடைபெறும். மேலும், இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேச்சில் குறிப்பிட்ட கருத்துகளை வைத்து விவாதங்கள் உருவாகும்.
'மாஸ்டர்' படப்பிடிப்பின்போது விஜய் வீட்டில் வருமான வரிச் சோதனை நடைபெற்றது. அதற்குப் பிறகு நடந்த இசை வெளியீட்டு விழாவில் விட அரசியல் ரீதியான விஷயங்களைத் தவிர்த்தார் விஜய். மேலும், 'மாஸ்டர்' முழுக்க கமர்ஷியல் படம்தான் எனவும் குறிப்பிட்டார்.
இதனால், அரசியல் விஷயங்களில் விஜய் பின்வாங்குவதாகத் தகவல் வெளியாகி வந்தது. தற்போது, விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் அளித்துள்ள பேட்டியில், விஜய் மக்கள் இயக்கம் அரசியல் காட்சியாக மாறும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
"நான் பாஜகவில் இணையவுள்ளதாக எழுப்பப்படும் கேள்விக்கு இப்போது பதில் சொல்ல முடியாது. எனக்கென்று ஒரு அமைப்பு இருக்கிறது. அந்த அமைப்பை வலுப்படுத்திக் கொண்டிருக்கிறேன். அதில் மட்டுமே முழுமையாக கவனம் செலுத்தி வருகிறேன்.
விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பு தேவைப்படும்போது அரசியல் கட்சியாக மாறும். மக்கள் விருப்பப்படும்போது மாறும். மக்கள் கூப்பிடும்போது நாங்கள் வருவோம். நாங்களாக வந்து மக்களைக் கூப்பிடுவதை விட, மக்கள் 'வா' என்று கூப்பிடும் போது இன்னும் பவர்ஃபுல்லாக இருக்கும்".
இவ்வாறு எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.