

பழம்பெரும் நடிகை மனோரமா மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்கம் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், "தென்னிந்திய நடிகர் சங்க மூத்த உறுப்பினரும், 1000 திரைப்படங்களூக்கும் மேல் நடித்து கின்னஸ் சாதனை படைத்தவரும் தமிழ்த் திரை உலகினலும் திரைப்பட ரசிகர்களாலும் 'ஆச்சி' என்று அன்போடு அழைக்கப்பட்டவருமான மனோரமா அவர்கள் மறைந்த செய்து தமிழகத்தை சோக வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளது.
தொடக்கத்தில் நாடக நடிகையாக தன் வாழ்க்கையை தொடங்கி தன் நடிப்புத் திறமையால் கதாநாயகியாகவும் பின்னர் நகைச்சுவை பாத்திரங்களில் நடித்து தமிழ் மக்களின் இதயங்களில் நீங்கா இடத்தை பிடித்தவர். அவர் போடாத வேடங்கள் இல்லை, பார்க்காத மேடைகள் இல்லை. அவரை ரசிக்காத கண்கள் இல்லை. பல மொழித் திரைப்படங்களில் தன் திறமையை காட்டி இந்திய துணைக் கண்டம் முழுவதும் ரசிகர்களை பெற்றவர் பத்மஸ்ரீ உள்ளிட்ட அனைத்து விருதுகளையும் பெற்றவர்.
தென்னிந்திய நடிகர் சங்க துணைத் தலைவராக நீண்ட காலம் பதவி வகித்தவர். நாடக நடிகர்களில் நல் வாழ்விற்காக அல்லும் பகலும் உழைத்தவர். அவரது இழப்பு ஈடுசெய்ய முடியாததாகும் அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்துக்கு தென்னிந்திய நடிகர் சங்க அனைத்து உறுப்பினர்கள் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்" என்று அந்த அறிக்கையில் தென்னிந்திய நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.