

'துக்ளக் தர்பார்' படத்திலிருந்து அதிதி ராவ் விலகியதால், அவருக்கு பதிலாக ராஷி கண்ணா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
அறிமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'துக்ளக் தர்பார்'. இதில் விஜய் சேதுபதி, பார்த்திபன், அதிதி ராவ், மஞ்சிமா மோகன், கருணாகரன், பக்ஸ் பெருமாள், ராஜ் உள்ளிட்ட பலர் நடித்து வந்தார்கள். இதன் படப்பிடிப்பு சுமார் 50% வரை முடிந்துவிட்டது.
இந்தப் படத்தில் அதிதி ராவ் சம்பந்தப்பட்ட காட்சிகளை மட்டும் படமாக்காமல் இருந்தது. தற்போது கரோனா அச்சுறுத்தலுக்குப் பிறகு படப்பிடிப்பு தொடங்க ஆயத்தமான போது, அதிதி ராவ்விடம் தேதிகள் இல்லை. இதனால், 'துக்ளக் தர்பார்' படத்திலிருந்து அதிதி ராவ் விலகிவிட்டார்.
தற்போது அவருக்குப் பதிலாக ராஷி கண்ணா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 'சங்கத்தமிழன்' படத்தில் விஜய் சேதுபதி - ராஷி கண்ணா கூட்டணி ஏற்கனவே இணைந்து நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. முழுக்க அரசியல் பின்னணி கொண்ட களமாக இந்தப் படம் உருவாகி வருகிறது.
ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா மற்றும் இசையமைப்பாளராக கோவிந்த் வசந்தா ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். இந்தப் படத்தை 'மாஸ்டர்' படத்தின் இணை தயாரிப்பாளரும், 'கோப்ரா', 'காத்துவாக்குல ரெண்டு காதல்', 'சீயான் 60' உள்ளிட்ட படங்களைத் தயாரித்து வரும் லலித் குமார் தயாரித்து வருகிறார்.