

நடிகர் விஜய் நடித்த திரைப்படங்கள் கடந்த சில ஆண்டுகளாக அடுத்தடுத்து சோதனைகளை சந்தித்து வருகின்றன.
நடிகர் விஜய் கடந்த 2009-ம் ஆண்டு புதுக்கோட்டையில் ‘விஜய் மக்கள் இயக்கம்’ என்ற பெயரில் ஒரு அமைப்பை தொடங்கினார். அந்த அமைப்பின் சார்பில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விஜய் “அரசியலுக்கு கட்டாயம் வருவேன். ஆனால், நிதானத்தோடு வருவேன்” என்றார். இந்த அறிவிப்புக்கு பிறகே விஜய்யின் படங்களுக்கு தொடர்ந்து சிக்கல் வருவதாக அவரது ரசிகர்கள் கூறுகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விஜய் நடித்த ‘தலைவா’ படம் ரிலீஸாகும் நேரத்தில் அதில் இடம் பெற்ற ‘டைம் டு லீட்’ என்ற வார்த்தை பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த தலைப்பை நீக்கிய பிறகே அப்படம் ரிலீஸானது. அதேபோல ‘துப்பாக்கி’ படம் வெளியானபோதும் சில முஸ்லிம் அமைப்புகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. ‘கத்தி’ திரைப்படம் வெளியானபோது, அப்படத்தை ராஜபக்ச ஆதரவு பெற்ற ‘லைக்கா’ நிறுவனம் தயாரித்ததாகக் கூறி அதை வெளியிட சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. ‘ஜில்லா’ படத்தின் ரிலீஸின்போதும் அதன் தயாரிப்பாளர் வீட்டில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. தற்போது ‘புலி’ படத்துக்கும் அதே பிரச்சினை வந்துள்ளது.
‘புலி’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகியுள்ளது. தற்போது வருமான வரி சோதனை காரணமாக ‘புலி’ படத்தின் கியூப் கேடிஎம்மை நேற்று இரவு வரை வழங்க முடியாததால் படத்தை வெளிநாடுகளில் ரிலீஸ் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. அதேபோல, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் அதிகாலை 5 மணிக்கு முதல் காட்சியை திரையிடுவதிலும் சிக்கல் ஏற்பட்டது. விஜய் படங் களுக்கு தொடர்ந்து ஏற்பட்டுவரும் சோதனைகள் அவரது ரசிகர் களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.