சம்பள விவகாரம்: யோகி பாபுவுக்கு ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள்

சம்பள விவகாரம்: யோகி பாபுவுக்கு ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள்
Updated on
1 min read

சம்பள விவகாரம் தொடர்பாக யோகி பாபுவுக்கு ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாக்யா சினிமாஸ் பட நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'பேய் மாமா'. ஷக்தி சிதம்பரம் இயக்கியுள்ள இந்தப் படத்தின் நாயகனாக யோகி பாபு நடித்துள்ளார். முழுக்க காமெடியைப் பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (அக்டோபர் 18) நடைபெற்றது.

இதில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு 'பேய் மாமா' படத்தின் இசையை வெளியிட்டார். இந்த விழாவில் இயக்குநர் மிஷ்கின், பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, மனோபாலா, அம்ரீஷ், ரமேஷ் கண்ணா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள்.

'பேய் மாமா' விழாவில் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி பேசியதாவது:

"'பேய் மாமா' படத்தின் இயக்குநர் ஷக்தி சிதம்பரம் மிகப்பெரிய இயக்குநர். கையில் என்ன இருக்கிறதோ அதைவைத்து மிகச்சிறப்பாக படத்தை எடுக்கக் கூடியவர். அனைவரையும் சிரிக்க வைக்கக் கூடிய படங்களை எடுத்தவர்.

யோகிபாபு மிகச்சிறந்த கலைஞர். அவரின் மனிதாபிமானம் பற்றியும் நிறையபேர் பேசியிருக்கிறார்கள். வடிவேலு நடிக்கவிருந்த படம் இது. இதற்கு யோகிபாபு செட் ஆவாரா என்று ஷக்தி சிதம்பரம் என்னிடம் கேட்டார். நான் கண்டிப்பாக செட் ஆவார் என்றேன். இப்போது ட்ரெய்லரைப் பார்க்கும் போது, நான் சொன்னது 100% சரியாக இருக்குறது.

மம்முட்டி என் படத்தில் நடிக்கும் போது 40 லட்சம் சம்பளம் வாங்கினார். அதே நேரத்தில் இன்னொரு படத்தில் நடிக்க 2 லட்சம் தான் சம்பளம் வாங்கினார். நான் கேட்டபோது அது ஆர்ட் பிலிம். என் சம்பளத்தை அவர்களால் தர முடியாது. அதேநேரம் என்னால் அந்தப்படத்தை மிஸ் பண்ண முடியாது என்றார்.

யோகிபாபுவுக்கு ஒரு வேண்டுகோள். படத்தின் பொருட்செலவை வைத்து சம்பளத்தை வாங்குங்கள். அப்போது தான் அனைத்து தரப்பு படங்களிலும் நீங்கள் இருக்க வேண்டும். நமது மார்க்கெட்டை வைத்து சம்பளத்தை முடிவு செய்யாமல் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் அனைத்து தரப்பு மக்களிடமும் நீங்கள் போய் சென்றடைவீர்கள்"

இவ்வாறு ஆர்.கே.செல்வமணி பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in