

ராஜமெளலி இயக்கத்தில் வெளியான 'பாகுபலி', சீனாவில் நவம்பர் மாதம் பிரம்மாண்டமாக வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.
ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'பாகுபலி'. ஆர்கா மீடியா நிறுவனம் தயாரித்தது, தமிழில் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் வாங்கிய படத்தை, ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டது.
இந்தியளவில் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம், வசூலையும் வாரிக் குவித்தது. இப்படத்தின் சர்வதேச பதிப்பை 'டேக்கன் 2' படத்தின் எடிட்டர் வின்செண்ட் தயார் செய்தார். இந்தியாவில் வெளியான படத்தை விட சர்வதேச பதிப்பில் 20 நிமிட காட்சிகளைக் குறைத்திருக்கிறார்கள்.
தற்போது, சீனாவில் 'பி.கே' படத்தை வெளியிட்ட இ-ஸ்டார்ஸ் நிறுவனம் 'பாகுபலி' படத்தின் உரிமையையும் வாங்கியிருக்கிறது. 'பி.கே' படத்தைப் போலவே நவம்பர் மாதம் சீனாவில் பிரம்மாண்டமாக 'பாகுபலி' படத்தையும் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள். சீனாவில் வெளியாக இருக்கும் முதல் தென்னிந்திய படம் 'பாகுபலி' என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது.
மேலும், ஷங்கர் இயக்கிய 'ஐ' படத்தை சீனாவில் வெளியிட இருப்பதாக ஆஸ்கர் ரவிச்சந்திரன் தெரிவித்து வந்தார். ஆனால், அப்படம் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.