Published : 17 Oct 2020 03:27 PM
Last Updated : 17 Oct 2020 03:27 PM

கீர்த்தி சுரேஷ் பிறந்தநாள் ஸ்பெஷல்: மும்மொழிகளில் நன்மதிப்பைப் பெற்ற நடிகை

சென்னை

தென்னிந்திய சினிமாவில் திறமையான நாயகி நடிகை என்கிற அங்கீகாரத்தை அனைத்து தரப்பிடமிருந்தும் குறுகிய காலத்தில் பெற்றுவிட்ட நடிகை கீர்த்தி சுரேஷ் இன்று (அக்டோபர் 17) தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

குழந்தை நட்சத்திரத் தொடக்கம்

'கீழ்வானம் சிவக்கும்' 'நெற்றிக்கண்', உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் நடித்த மேனகாவுக்கும் மலையாள இயக்குநர்-தயாரிப்பாளர் சுரேஷ் குமாருக்கும் மகளாகப் பிறந்தவர் கீர்த்தி. தன் தந்தை தயாரித்த சில மலையாளப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் பிரியதர்ஷன் இயக்கத்தில் 2013-ல் வெளியான 'கீதாஞ்சலி' மலையாளப் படத்தில் முதல் முறையாக கதாநாயகியாக நடித்தார். முதல் படத்திலேயே இரட்டை வேடம் அமைந்தது. அடுத்ததாக ரவி இயக்கத்தில் திலீப்புடன் கீர்த்தி சுரேஷ் நடித்த படம் 'ரிங் மாஸ்டர்' மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. இந்தப் படத்தில் பார்வைத் திறனற்றவராக நடித்திருந்தார் கீர்த்தி.

தேடிவந்த தமிழ் வாய்ப்புகள்

இந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு தமிழ் படங்களில் நடிக்கும் பல வாய்ப்புகள் கீர்த்தி சுரேஷை நாடி வந்தன. 2015-ல் விஜய் இயக்கத்தில் வெளியான 'இது என்ன மாயம்' கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான முதல் தமிழ்ப் படமானது. அவர் கல்லூரி மாணவியாக நடித்திருந்த இந்த படம் பெரிய வரவேற்பைப் பெறவில்லை என்றாலும் கீர்த்தி சுரேஷ் தமிழ்த் திரைத்துறையினர் மற்றும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷுடன் 'தொடரி' படத்தில் நடித்தார். அந்தப் படம் மிகவும் தாமதமாக வெளியானது.

இடைப்பட்ட காலத்தில் சிவகார்த்திகேயனுடன் கீர்த்தி சுரேஷ் நடித்த 'ரஜினி முருகன்', 'ரெமோ' ஆகிய இரண்டு படங்களும் வெற்றிபெற்றன. ஒன்றில் சிறு நகரப் பெண்ணாகவும் இன்னொன்றில் பெருநகரில் வாழும் மருத்துவராகவும் நடித்திருந்தார் கீர்த்தி. இதே ஆண்டில் ராம் போதினேனி ஜோடியாக 'நேனு சைலஜா' படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் கால் பதித்தார் கீர்த்தி சுரேஷ். தெலுங்கில் அறிமுகப் படமே வெற்றிப் படமாக அமைந்தது.

2017 பொங்கலுக்கு வெளியான 'பைரவா' படத்தில் விஜய்யின் இணையாக நடித்தார் கீர்த்தி சுரேஷ். இந்தப் படம் வெற்றிபெறவில்லை என்றாலும் கீர்த்தி சுரேஷ் முதல்நிலை நட்சத்திரங்களில் நடிப்பதற்கான தொடக்கமாக அமைந்தது. அதே ஆண்டில் பாபி சிம்ஹாவுடன் நடித்த 'பாம்பு சட்டை' தெலுங்கில் முன்னணி நாயக நடிகர் நானியுடன் நடித்த 'நேனு லோக்கல்' படங்கள் வெளியாகின.

சாவித்திரியின் மறுவார்ப்பு

2018-ம் ஆண்டு கீர்த்தி சுரேஷின் திரை வாழ்வில் மிக முக்கியமான ஆண்டு. நான்கு தமிழ்ப் படங்கள், ஒரு தெலுங்குப் படம், ஒரு தெலுங்கு-தமிழ் இருமொழிப் படம் என ஐந்து படங்களில் நாயகியாகவும் நடித்தார் கீர்த்தி சுரேஷ். இவற்றில் தெலுங்கில் 'மஹாநடி' என்றும் தமிழில் 'நடிகையர் திலகம்' என்றும் பெயரிடப்பட்டு உருவான இருமொழிப் படம் தென்னிந்திய சினிமா வரலாற்றில் தலை சிறந்த நடிகையரில் ஒருவரான சாவித்திரியின் வாழ்க்கைக் கதையைத் திரையில் பதிவுசெய்தது.

இதில் சாவித்திரி வேடத்தில் கீர்த்தி சுரேஷின் தோற்றப் பொருத்தமும் நடிப்பும் அவ்வளவு சிறப்பாக அமைந்து அனைவரையும் வியக்க வைத்தன. இரு மொழிகளிலும் படம் வெற்றிபெற்றது. விமர்சகர்கள் அனைவரையும் படத்தையும் கீர்த்தி சுரேஷையும் பாராட்டு மழையில் நனையச் செய்தார்கள். 1981-ல் இறந்துவிட்ட சாவித்திரி 2018-ல் மீண்டும் உயிர்பெற்று திரையில் தோன்றிய உணர்வை ஏற்படுத்தியதாக ரசிகர்களும் விமர்சகர்களும் கொண்டாடினார்கள். கீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது.

அதே ஆண்டில் விக்னேஷ் சிவன் இயக்கிய 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் சூர்யா, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 'சர்கார்' படத்தில் விஜய், ஹரிய இயக்கத்தில் 'சாமி 2' திரைப்படத்தில் விக்ரம், லிங்குசாமி இயக்கிய 'சண்டக்கோழி; 2'வில் விஷால் ஆகிய நட்சத்திர நடிகர்களின் ஜோடியாக நடித்தார் கீர்த்தி சுரேஷ். இது தவிர 'சீமராஜா' படத்தில் கெளரவத் தோற்றத்தில் மகாராணியாக நடித்தார்.

கீர்த்தி சுரேஷ் நடித்த நாயகியை மையப்படுத்திய படமான 'பெண்குயின்' தற்போது கரோனா ஊரடங்கு காரணமாக ஓடிடி தளத்தில் சில மாதங்களுக்கு முன் வெளியானது. கார்த்திக் சுப்பாராஜ் தயாரித்திருந்த இந்தப் படத்தில் தொலைந்துவிட்ட தன் மகனைத் தேடிச் செல்லும் கர்ப்பிணித் தாயாக சிறப்பாக நடித்திருந்தார் கீர்த்தி..

நட்சத்திரங்களின் நாயகி

அடுத்ததாக தெலுங்கில் 'மிஸ் இந்தியா', 'குட்லக் சகி' ஆகிய படங்கள் வெளியாகக் காத்திருக்கின்றன. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் 'அண்ணாத்த' படத்திலும் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுடன் 'மரக்கர்:அரபிக்கடலிண்டே சிம்மம்' ஆகிய படங்களிலும் நடித்துவருகிறார். இவை தவிர இயக்குநர் செல்வராகவன் நடிகராக அறிமுகமாகும் 'சாணி காயிதம்' படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு நடிப்பில் உருவாகும் 'சர்க்காரு வாரி பாடா' என்னும் தெலுங்கு படத்தில் நாயகியாக நடிக்கவிருக்கிறார்.

இப்படி தமிழ். தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படங்களில் நடித்துவருகிறார் கீர்த்தி சுரேஷ். நட்சத்திர நடிகர்களோடு நடிக்கும் படங்களைத் தவிர நாயகியை மையப்படுத்திய படங்களிலும் நடித்துவருகிறார். மூன்று மொழிகளிலும் முதலிடத்தை நோக்கி வேகமாகப் பயணித்துவருகிறார். .

தமிழர்க்கு நெருக்கமான நாயகி

அழகு திறமை ஆகியவற்றைத் தாண்டி தோற்றம், சொந்தக் குரலில் பிழையற்ற உச்சரிப்புடன் பேசுவது என அனைத்திலும் முழுமையான தமிழ்ப் பெண்ணாக இருப்பது கீர்த்தி சுரேஷை தமிழ் ரசிகர்களின் மனதுக்கு மேலும் நெருக்கமானவர் ஆக்குகின்றன. 'நடிகையர் திலகம்' படத்தில் அவருடைய அபார நடிப்புத் திறமை வெளிப்பட்டு அனைவரையும் வியந்து பாராட்ட வைத்தது என்றாலும் அவர் மற்ற படங்களிலும் கதாபாத்திரத்தின் தன்மையை முழுமையாக உள்வாங்கி மிகையின்றியும் குறையின்றியும் கச்சிதமாக நடிக்கும் திறமைசாலியாகவே இருந்திருக்கிறார்.

'ரெமோ' படத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டவருக்கும் காதலனுக்கும் இடையில் யாரைத் தேர்ந்தெடுப்பது என்னும் மனப் போராட்டத்தையும் 'தொடரி;யில் ரயில் பயணத்தில் ஆபத்தில் சிக்கிக்கொண்ட ஒரு அப்பாவி ஏழைப் பெண்ணின் மருட்சியையும், 'சண்டக்கோழி 2'வில் துணிச்சலும் துடுக்குத்தனமும் நிறைந்த கிராமத்துப் பெண்ணாகவும் அவருடைய நடிப்பு வெகு சிறப்பாக அமைந்திருந்தது. அவருடைய நடனத் திறனும் ரசிக்கத்தக்கதாகவே இருந்துள்ளது.

மிக இளைய வயதில் தேசிய விருதை வென்று, தமிழ், தெலுங்கு, மலையாளம் என மும்மொழிகளில் அழுத்தமான முத்திரை பதித்துவிட்டு தன் வெற்றிப் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ் வரும் ஆண்டுகளில் இன்னும் பல தரமான திரைப்படங்களில் சவாலான கதாபாத்திரங்களில் நடித்து மேலும் பல சாதனைகளை நிகழ்த்த வேண்டும் என்று அவரை மனதார வாழ்த்துவோம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x