'800' படத்தை நிராகரித்த டி.ஜே.-சமூக வலைதளத்தில் வரவேற்பு

'800' படத்தை நிராகரித்த டி.ஜே.-சமூக வலைதளத்தில் வரவேற்பு
Updated on
1 min read

'800' படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தபோது அதை நிராகரித்த டி.ஜே.வுக்கு சமூக வலைதளத்தில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

முத்தையா முரளிதரன் பயோபிக்கில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 800 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்திருப்பதால், முத்தையா முரளிதரன் பயோபிக் கதைக்கு '800' எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு.

முத்தையா முரளிதரன் பயோபிக்கில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என எதிர்ப்பு உருவாகியுள்ளது. அரசியல் கட்சித் தலைவர்கள், இலங்கைத் தமிழர்கள், இயக்குநர்கள் பாரதிராஜா, சீனு ராமசாமி, சேரன் உள்ளிட்ட பலரும் விஜய் சேதுபதிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். '800' படத்துக்கு எதிர்ப்புக்கு தெரிவிப்பவர்களை கடுமையாக விமர்சித்துப் பதிவுகளை வெளியிட்டு இருந்தார் ராதிகா சரத்குமார்.

இதனிடையே, '800' படத்தில் சிறுவயது முத்தையா முரளிதரனாக நடிக்க டி.ஜே.வை அணுகியது படக்குழு. அவருக்குக் கதை எல்லாம் பிடித்திருந்தாலும், இதில் நடிக்க விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார். ஏனென்றால், தனது தாய் ஈழத் தமிழர் என்பதால், அங்கு நடந்த விஷயங்கள் என்னைப் பாதித்துள்ளதாகவும் ஆகையால் நடிக்க மறுத்துவிட்டதாகவும் கூறியுள்ளார் டி.ஜே.

டி.ஜே.வின் இந்த முடிவுக்கு சமூக வலைதளத்தில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. சமீபத்தில் 'அசுரன்' படத்தில் தனுஷின் மூத்த மகனாக நடித்து பெரும் வரவேற்பைப் பெற்றவர் டி.ஜே. என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in