Published : 16 Oct 2020 06:45 PM
Last Updated : 16 Oct 2020 06:45 PM

இசையமைப்பாளர் அனிருத் பிறந்தநாள் ஸ்பெஷல்: தவிர்க்க முடியாத தடம் பதித்த சாதனையாளர் 

சென்னை

தமிழ் சினிமாவின் இளம் நட்சத்திர இசையமைப்பாளரும் பின்னணிப் பாடகருமான அனிருத் ரவிச்சந்தர் இன்று (அக்டோபர் 16) தன்னுடைய பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

கலைஞர்களின் குழந்தை

இந்திய சினிமாவின் தொடக்க காலத்தில் இயக்குநராக கோலோச்சிய கே.சுப்பிரமணியத்தின் கொள்ளுப் பேரன் அனிருத். அவருடைய தந்தை ரவி ராகவேந்தர் நன்கு அறியப்பட்ட நடிகர். தாய் லட்சுமி செவ்வியல் நடனக் கலைஞர். இதுதவிர சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் இவருடைய அத்தை. ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா தன் கணவர் தனுஷை நாயகனாக வைத்து இயக்கிய '3' திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ்த் திரையுலகுக்கும் ரசிகர்களுக்கும் அறிமுகமானபோது அனிருத்தின் வயது 22.

பத்து வயதில் தொடங்கிய பயணம்

கலைக்குடும்ப வாரிசான அனிருத் பத்து வயது முதல் இசையமைத்து வருகிறார். பள்ளி இசைக்குழுவில் செயல்பட்டு வந்தார். லயோலா கல்லூரியில் பட்டம் பெற்ற பிறகு லண்டன் ட்ரினிட்டி இசைக் கல்லூரியில் பியானோ இசை பயின்று தேர்ச்சி பெற்றார். அதோது ஒலிப் பொறியியலில் (Sound Engneering) பட்டயம் பெற்றார். கர்நாடக இசையையும் முறைப்படி கற்றுள்ளார்.

கல்லூரியில் படிக்கும்போது ஐஸ்வர்யா இயக்கிய குறும்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் அனிருத். அதனால் ஈர்க்கப்பட்டுதான் அவருக்கு '3' படத்தில் இசையமைக்க வைத்தார் ஐஸ்வர்யா.

உலகப் புகழ்பெற்ற முதல் பாடல்

படத்தின் முதல் சிங்கிள் ட்ராக் பாடலாக 2011-ல் வெளியான 'ஒய் திஸ் கொலவெறிடி' உள்ளூரில் மட்டுமல்லாமல் உலக அளவில் பெரும் சாதனைகளைப் படைத்தது. யூடியூப் இணையதளத்தில் கோடிக் கணக்கான பேரால் பார்க்கப்பட்டு சாதனை படைத்தது பாலிவுட் ரசிகர்களிடம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் மெகா ஹிட் ஆனது. பல இந்திய மொழிகளில் இந்தப் பாடலின் மெட்டில் வேறு பல பாடல்கள் உருவாக்கப்படும் அளவுக்கு இதன் மெட்டு பிரபலமடைந்தது

'3' படத்தின் மற்ற பாடல்களும் இசை ரசிகர்களாலும் விமர்சகர்களாலும் பெரிதும் பாராட்டப்பட்டன. ஒவ்வொரு பாடலும் வெவ்வேறு வகைமையில் அமைந்து அனிருத்தின் பன்முக இசைத் திறமையைப் பறைசாற்றின. 2012 தொடக்கத்தில் வெளியான அந்தப் படத்தின் பின்னணி இசையும் பாராட்டப்பட்டது.

தொடக்கால வெற்றிகள்

தொடர்ந்து 'டேவிட்' என்னும் தமிழ் - இந்தி இருமொழிப் படத்தில் அனிருத் இசையமைத்த பாடல் கவனம் ஈர்த்தது. தமிழில் சிவகார்த்திகேயனின் தொடக்ககால வெற்றிப் படங்களில் ஒன்றான 'எதிர்நீச்சல், மிர்ச்சி சிவா நடித்த 'வணக்கம் சென்னை' போன்ற படங்களில் வெற்றிப் பாடல்கள் அமைந்தன. தனி ஆல்பங்களுக்காகப் புகழ்பெற்றிருந்த ஹிப்ஹாப் தமிழா ஆதி, யோயோ ஹனிசிங் ஆகிய ராப் கலைஞர்களை இந்தப் படங்களின் மூலம் திரைப்படத் துறைக்கு அறிமுகப்படுத்தினார் அனிருத். பாடகர் விஷால் தத்லானியை தமிழில் அறிமுகப்படுத்தினார். இவற்றுக்கிடையே செல்வராகவனின் 'இரண்டாம் உலகம்' திரைப்படத்துக்கு பின்னணி இசை அமைத்தார். அந்தப் படத்தின் பாடல்களுக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்த நிலையில் தவிர்க்க முடியாத சூழலால் அவரால் பின்னணி இசையமைக்க முடியாமல் போக அப்போது புதியவராக கவனம் ஈர்த்துவந்த அனிருத்தை பின்னணி இசைக்குத் தேர்ந்தெடுத்திருந்தார் செல்வா. புகழ்பெற்ற இயக்குநர் தன் மீது வைத்த நம்பிக்கைக்கு நியாயம் சேர்த்தார் அனிருத்

முத்திரை பதித்த தீம் இசை

2014-ல் தனுஷின் 25-வது படமான 'வேலையில்லா பட்டதாரி', விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 'கத்தி' ஆகிய இரண்டு மெகா ஹிட் படங்களுக்கு இசையமைத்தார் அனிருத். இந்த இரண்டு படங்களிலும் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆகின என்பதோடு 'விஐபி' தீம், 'கத்தி' தீம் என அனிருத் அமைத்த தீம் இசைத் துணுக்குகள் அனிருத்தின் தனித்துவ முத்திரைகளாகின. 'விஐபி' தீம் இசை தனுஷின் தயாரிப்பு நிறுவனத்துக்கான லோகோ திரையரங்குகளில் இடம்பெறும்போது இசைக்கப்படும் இசையாக இருக்கிறது. அந்த அளவுக்கு தனுஷ் ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது அந்தத் தீம் இசைத் துணுக்கு.

முக்கிய வெற்றிகள்

2015-ல் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி-நயன்தாரா நடித்த 'நானும் ரெளடிதான்' படத்தில் அனிருத் இசையமைத்த அனைத்துப் பாடல்களும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றன. அதே ஆண்டில் சிவகார்த்திகேயன் நடித்த 'காக்கி சட்டை', தனுஷ் நடித்து தயாரித்த 'மாரி', அஜித் நடித்த 'வேதாளம்' படங்களிலும் வெற்றிப் பாடல்களைக் கொடுத்தார் அனிருத். 'மாரி' தீம் 'விஐபி' தீம் ஏற்படுத்தியிருந்த எதிர்பார்ப்பை முழுமையாக நிறைவேற்றியது. 'வேதாளம்' படத்தில் இடம்பெற்ற 'ஆலுமா டோலுமா' 'தல' ரசிகர்களுக்கு முழுமையான விருந்தாக அமைந்தது. இன்றுவரை எல்லா மேடைக் கச்சேரிகளிலும் அஜித் ரசிகர்களைக் கவர்வதற்கான பாடலாகப் பாடப்பட்டுவருகிறது. 2016-ல் 'ரெமோ' படத்திலும் அனைத்துப் பாடல்களையும் வெற்றிப் பாடல்களாகக் கொடுத்து அந்தப் படத்தின் வெற்றிக்கு வழிவகுத்தவர்களில் ஒருவரானார்.

2017-ல் அஜித் நடிப்பில் மெகா பட்ஜெட்டில் முழுமையாக ஐரோப்பிய நாடுகளில் உருவாக்கப்பட்ட 'விவேகம்' படத்துக்கு அனிருத்தின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் சர்வதேசத்தன்மை வாய்ந்ததாக அமைந்திருந்தன. அதே ஆண்டில் மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நயன்தாரா நடித்த 'வேலைக்காரன்' படத்திலும் வெற்றிப் பாடல்களைக் கொடுத்தார் அனிருத். 2018-ல் சூர்யா நடித்த 'தானாசேர்ந்த கூட்டம்', நயன்தாராவின் 'கோலாமாவு கோகிலா' படங்களுக்கு இசையமைத்து இரண்டிலும் வெற்றிப் பாடல்களைக் கொடுத்தார்.

சூப்பர் ஸ்டாருக்கு சூப்பர் இசை

கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய 'பேட்ட' படத்தின் மூலம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு இசையமைக்கும் வாய்ப்பையும் பெற்றார். அதுவரை சந்தோஷ் நாராயணனுடன் மட்டும் பணியாற்றிவந்த கார்த்திக் சுப்பாராஜ் முதல் முறையாக அனிருத்துடன் பணியாற்றினார். அந்தப் படத்திலும் அனைத்துப் பாடல்களும் வெற்றி பெற்றன என்பதோடு சூப்பர் ஸ்டாரின் பிரம்மாண்ட இமேஜுக்குப் கச்சிதமாகப் பொருந்தியதால். ரசிகர்களை முழுமையாகத் திருப்திப்படுத்தியது. ரஜினி நடித்த அடுத்த படமான 'தர்பார்' படத்துக்கு அனிருத்தான் இசையமைத்தார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் , விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்துள்ள 'மாஸ்டர்' படத்துக்கு அனிருத் அமைத்துள்ள பாடல்கள் அனைத்தும் ஏற்கெனவே மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுவிட்டன. குறிப்பாக 'வாத்தி கம்மிங்', 'வாத்தி ரைடு' ஆகிய இரண்டு பாடல்களுக்கும் திரையரங்கில் பேயாட்டம் போட்டுக் கொண்டாட தளபதியின் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

சூப்பர் இயக்குநருடன்

தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துவரும் 'இந்தியன் 2' படத்துக்கு இசையமைத்துவருகிறார் அனிருத். ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ் ஆகிய இருவரல்லாத ஒரு இசையமைப்பாளருடன் முதல் முறையாகப் பணியாற்றிவருகிறார் ஷங்கர்.

நட்சத்திரங்கள் விரும்பும் கலைஞர்

தனுஷ் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கவிருக்கும் அடுத்த படத்துக்கு அனிருத் இசையமைக்கப்போகிறார் என்று அறிவிப்பு இன்று வெளியாகியிருக்கிறது. அதே நிறுவனம் விஜய்யை நாயகனாக வைத்து முருகதாஸ் இயக்கத்தில் தயாரிக்கப்போவதாகச் சொல்லப்படும் படத்துக்கும் அனிருத் இசையமைப்பதற்கான சாத்தியங்கள் அதிகம்.

'மாஸ்டர்', 'இந்தியன் 2' ஆகிய படங்களுக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கவிருக்கும் படத்துக்கும் அனிருத்தான் இசையமைக்கவிருக்கிறார். திறமை வாய்ந்த இயக்குநர்கள், சாதனைக் கலைஞர்கள் பலர் அனிருத்துடன் தம் படங்களில் மீண்டும் மீண்டும் பணியாற்றுகிறார்கள் என்பதிலிருந்து இந்த இளம் வயதில் அனிருத் அடைந்திருக்கும் முக்கியத்துவத்தையும் அதற்குக் காரணமாக அமைந்த அவருடைய அபார திறமையையும் அயராத உழைப்பையும் புரிந்துகொள்ளலாம்.

தனித்துவ சாதனைகள்

அனிருத் இசையமைத்த படங்கள் அனைத்திலும் பெரும்பாலான பாடல்கள் வெற்றிப் பாடல்கள்தாம். அந்த வகையில் இன்றைய தமிழ் சினிமாவில் மிகவும் வெற்றிகரமான இசையமைப்பாளர் அவர். ஒரு இசையமைப்பாளராக இந்தக் கால இளைஞர்களின் ரசனைக்கேற்ற துடிப்புமிக்க அதிரடிப் பாடல்களைத் தொடர்ந்து கொடுத்துக்கொண்டு இருப்பதே அனிருத்தின் வெற்றிக்கு முதன்மைக் காரணம் எனலாம். ஆனாலும் அனைத்து வயதினருக்கும் ஏற்ற பாடல்களையும் மென்மையான மெலடி பாடல்களையும் சோகப் பாடல்களையும்கூட அவர் நிறையக் கொடுத்திருக்கிறார்.

உதாரணமாக 'வேதாளம்' படத்தில் இடம்பெற்ற 'உயிர்நதி' என்னும் உணர்வுபூர்வமான பாடல் மிகவும் உருக்கமானதாக அமைந்திருக்கும். 'வணக்கம் சென்னை'யில் 'ஒஸகா ஒஸகா', 'ஓ பெண்ணே' 'தங்க மகன்' படத்தில் 'என்ன சொல்ல' போன்ற பல மென்மையான மெலடி பாடல்கள் ஆண்டுகள் கழித்து கேட்கும்போதும் புத்துணர்வை அளிப்பவையாகவும் ரசிக்கத்தக்க விதத்திலும் உள்ளன.

தன் இசையமைப்பில் ஹிப்ஹாப், ராப் போன்ற புதுமையான இசை வடிவங்களை அதிகமாகப் பயன்படுத்தி அவற்றைத் தமிழர்களிடையே பிரபலப்படுத்தியவர் என்பது அனிருத்தின் தனித்துவம் மிக்க சாதனை.

பாடகராகவும் சாதனையாளர்

இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் பின்னணிப் பாடகராகவும் தனி ஆல்பங்கள் மூலமாகவும் அதிக கவனம் ஈர்த்திருப்பவர் அனிருத். '3' படத்திலிருந்தே தான் இசையமைக்கும் படங்கள் பெரும்பாலானவற்றில் ஒரே ஒரு பாடலையாவது பாடியிருக்கிறார் அனிருத். இந்த வகையில் 'பூமி என்ன சுத்துதே (எதிர்நீச்சல்) தொடங்கி 'பங்கம் வந்து' (கத்தி'), 'டானு டானு டானு' (மாரி), 'வாடி என் தமிழ்ச்செல்வி (ரெமோ) என பல வெற்றிப் பாடல்கள் அமைந்தன.

தான் இசையமைத்த பாடல்கள் மட்டுமல்லாமல் மற்ற இசையமைப்பாளர்களின் படங்களிலும் வெற்றிப் பாடல்களைப் பாடியுள்ளார். ஷங்கரின் 'ஐ' படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அனிருத் பாடிய 'மெர்சலாயிட்டேன்' பாடல் அந்த ஆண்டின் மிகப் பெரிய ஹிட் பாடல்களில் ஒன்று. 'டண்டணக்கா ('ரோமியோ ஜூலியட்') 'யப்பா சப்பா' (கணிதன்), 'ஷூட் த குருவி' (ஜில் ஜங் ஜக்)', 'ஹே மாமா' (சேதுபதி), 'யாஞ்சி' ('விக்ரம் வேதா'), 'ஒத்தையடிப் பாதையில' ('கனா') என மற்றவர்கள் இசையமைப்பில் அனிருத் பாடிய வெற்றிப் பாடல்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.

எட்டு ஆண்டுகளில் 25க்கும் குறைவான படங்களுக்கு இசையமைத்திருக்கும் அனிருத் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இடத்தை அடைந்திருக்கிறார். நட்சத்திர நடிகர்களும் இயக்குநர்களும் அவருடன் தொடர்ந்து பணியாற்ற விரும்புகிறார்கள். அவருக்கென்று மிகப் பெரிய ரசிகர் படை உருவாகியுள்ளது, இந்த இளம் வயதில் இவ்வளவு பெரிய சாதனையைச் செய்திருக்கும் அனிருத் வருங்காலத்தில் இன்னும் பெரிய சாதனைகளை நிகழ்த்தி மேலும் பல உயரங்களை அடைந்து என்றும் மங்காத புகழைப் பெற அனிருத்தை மனதார வாழ்த்துவோம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x