

சிவா இயக்கி வரும் படத்தில் ப்ளாஷ்பேக் காட்சிகளில் 'ரெட்' கெட்டப்பில் நடித்திருக்கிறார் அஜித்
'வீரம்' படத்தைத் தொடர்ந்து மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன், சூரி உள்ளிட்ட பலர் அஜித்துடன் இணைந்து நடித்து வருகிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு முதலில் சென்னையில் தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இத்தாலி, கொல்கத்தா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
தற்போது சென்னையில் உள்ள மோகன் ஸ்டூடியோவில் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இப்படத்தில் வரும் ப்ளாஷ்பேக் பகுதி காட்சிகளில் 'ரெட்' படத்தில் வருவது போன்ற தோற்றத்தில் நடித்திருக்கிறார் அஜித்.
விளம்பரப்படுத்தும்போது கூட இக்காட்சியின் புகைப்படங்களை வெளியிடாமல், படம் பார்க்கும் அஜித் ரசிகர்களுக்கு புதிதாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறது படக்குழு.
மோகன் ஸ்டூடியோ படப்பிடிப்பைத் தொடர்ந்து 2 பாடல் காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட இருக்கிறது. அதனைத் தொடர்ந்து இறுதிகட்ட பணிகள் துவங்க திட்டமிட்டு இருக்கிறார்கள். இப்படத்தை தீபாவளிக்கு வெளியிட முடிவு செய்திருக்கிறது படத்தயாரிப்பு நிறுவனம்.
இப்படத்தின் பெயர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர், விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் என்று அஜித் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால், படக்குழு எந்த ஒரு தகவலையும் வெளியிடாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது