

அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார் விஜய்.
சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'புலி' படத்தைத் தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கினார் விஜய். சமந்தா, ஏமிஜாக்சன், இயக்குநர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். தாணு தயாரித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி நடைபெற்று வருகிறது.
போலீஸ் அதிகாரியாக விஜய் நடித்து வருகிறாரா என்று கேள்வி எழுப்பப்பட்ட போது, அதற்கு பதிலளிக்க படக்குழு மறுத்துவிட்டது.
இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பில் உள்ள புகைப்படம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அதில் விஜய் போலீஸ் உடை அணிந்து இருப்பதால், விஜய் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிப்பது உறுதியாகி இருக்கிறது.
சென்னை படப்பிடிப்பு முடிந்தவுடன், கோவாவில் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.
முன்னதாக, போக்கிரி, ஜில்லா உள்ளிட்ட படங்களில் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் விஜய் நடத்திருந்தது குறிப்பிடத்தக்கது.