Published : 15 Oct 2020 12:33 pm

Updated : 15 Oct 2020 12:33 pm

 

Published : 15 Oct 2020 12:33 PM
Last Updated : 15 Oct 2020 12:33 PM

விஜய் சேதுபதிக்கு பாரதிராஜா வேண்டுகோள்: '800' படக்குழுவினருக்கு கண்டனம்

bharathiraja-to-vijay-sethupathi

சென்னை

முத்தையா முரளிதரன் பயோபிக்கைத் தவிர்க்கவும் என்று விஜய் சேதுபதிக்கு பாரதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முத்தையா முரளிதரன் பயோபிக்கில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 800 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்திருப்பதால், முத்தையா முரளிதரன் பயோபிக் கதைக்கு '800' எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு.

முத்தையா முரளிதரன் பயோபிக்கில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என்று இலங்கைத் தமிழர்கள் சார்பில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. தொடர்ச்சியாக சமூக வலைதளத்திலும் இந்த எதிர்ப்பு எதிரொலித்து வருகிறது.

இயக்குநர் சீனு ராமசாமி, சேரன் உள்ளிட்ட பலரும் '800' படத்தில் நடிக்க வேண்டாம் என்று விஜய் சேதுபதிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தற்போது, இயக்குநர் பாரதிராஜாவும் விஜய் சேதுபதிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக பாரதிராஜா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"மக்களிடம் நல்ல பெயர் எடுப்பது ரொம்பக் கடினம். ஆனால், பொதுமக்கள் வெகு வேகமாகவே உங்கள் மீது அன்பைக் கொட்டியுள்ளனர். அதற்கு இயல்பான, யதார்த்தமான பேச்சும் கடைக்கோடி மக்களின் எண்ணப் பிரதிபலிப்புமே காரணம். இன்னும் நீண்டு செல்லும் இந்தப் பயணத்தில் மேலும் புகழ் பெறவே வாழ்த்துகிறேன்.

நிற்க.

தாங்கள் செய்யவிருக்கும் '800' என்ற படம் பற்றிக் கேள்விப்பட்டேன். இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனைப் பற்றிய பயோபிக் படமாக அது உருவாகப் போவதாக அறிந்தேன். நம் ஈழத்தமிழ்ப் பிள்ளைகள் செத்து விழுந்தபோது பிடில் வாசித்தவர் இந்த முத்தையா. சிங்கள இனவாதத்தை முழுக்க முழுக்க ஆதரித்தவர்.

விளையாட்டு வீரனாக என்னதான் சாதித்தாலும், தன் சொந்த மக்கள் கொல்லப்பட்டபோது சிரித்து மகிழ்பவர் என்ன சாதித்து என்ன பயன்?. எத்தனையோ துரோகங்களை எம்மினம் கடந்து வந்துள்ளது. எங்களைப் பொறுத்தவரை முத்தையா முரளிதரனும் ஒரு நம்பிக்கைத் துரோகிதான். அடிபட்ட வலியை நினைவுகூரும் மக்கள் என்னிடம், ஏன் நம்ம விஜய் சேதுபதி அதில் நடிக்கிறார்? மறுத்திருக்கலாமே... எனக் கேட்கின்றனர்.

அவர்களின் வேதனையும் வலியும் புரியும் அதேசமயம் அவர்கள் உங்கள் மீது வைத்திருக்கும் அன்பையும் என்னால் காண முடிந்தது. உலகெங்கிலும் வாழும் தமிழர்களின் சார்பாக நான் கோரிக்கை வைக்கிறேன். இனத்துரோகம் செய்த ஒருவரின் முகம் காலங்காலமாக உங்கள் முகமாக வெறுப்போடே எம் மக்கள் பார்க்க வேண்டுமா?

எந்த வகையிலாவது தமிழின வெறுப்பாளனின் வாழ்வியல் படத்தில் நடிப்பதைத் தவிர்க்க முடியுமா பாருங்கள். தவிர்த்தால் எப்போதும் எம் ஈழ மக்களின் மனதிலும், என் மனதிலும் நன்றியோடு நினைவு கொள்ளப்படுவீர்கள்.

பின்குறிப்பு: '800' திரைப்படத்தை எடுக்க இருக்கும் Dar media நிறுவனம் நேற்று மாலை ஒரு அறிக்கை வெளியிட்டதை அறிந்தேன்.

800 - திரைப்படம் அரசியல் படமில்லை. ஒரு விளையாட்டு வீரனின் வாழ்க்கை வரலாற்றை மட்டுமே படமாக்க இருக்கிறோம். இந்த திரைப்படம் எடுத்தால் பல ஈழத்தமிழர் திரைக் கலைஞர்கள், தொழில் நுட்பக் கலைஞர்களின் திறமை உலக அரங்கில் வெளிக் காட்ட அடித்தளமாக இருக்கும் என்று வெளியிட்டு இருந்தீர்கள்.

துரோகிக்குத் துணை போகும் உங்களை நினைத்துக் கோபப்படுவதா ? இல்லை உங்கள் அறியாமையைக் கண்டு சிரிப்பதா ? அனைத்துத் துறைகளிலும் உலக அரங்கில் தமிழர்களின் பங்களிப்பு என்னவென்று வரலாற்றைப் புரட்டிப் பாருங்கள். பாடம் சொல்லும். ஒரு செய்தியை அழுத்தமாக இங்கு பதிவிட விரும்புகிறேன்.

உங்களுக்கு வேண்டுமானால் முத்தையா முரளிதரன் சிறந்த விளையாட்டு வீரனாக இருக்கலாம். எங்களைப் பொறுத்தவரை அவர் இனத் துரோகி. துரோகிகளை ஒரு போதும் தமிழினம் மன்னிக்க இயலாது. ஒரு போராளியின் தியாகம் , ஆயிரம் முத்தையா முரளிதரன் வந்தால் கூட ஈடு செய்யமுடியாது.

உண்மையிலேயே நீங்கள் தமிழர்களின் திரைக் கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களின் திறமையைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பினால், அகிம்சை வழியில் போராடி தீயாக இன்றும் சுடர் விட்டுக் கொண்டிருக்கும் தம்பி திலீபனின் வாழ்க்கை வரலாறு, அல்லது எங்கள் மக்களுக்காகத் தன்னையே உயிராயுதமாக உருக்கி எம் மண்ணோடு, காற்றோடு, கலந்த போன பல்லாயிரக்கணக்கான போராளிகளில், ஒரு மாவீரனின் வாழ்க்கை வரலாற்றை , உலக அரங்கில் எடுக்க முன் வா... ஒட்டுமொத்தத் தமிழர்களும், திரைத் துறையினரும் இலவசமாகப் பணியாற்றக் காத்திருக்கிறோம்".

இவ்வாறு பாரதிராஜா தெரிவித்துள்ளார்.


தவறவிடாதீர்!

பாரதிராஜாபாரதிராஜா கண்டனம்பாரதிராஜா வேண்டுகோள்விஜய் சேதுபதிஇயக்குநர் ஸ்ரீபதி800800 படக்குழுவினர்800 ஃபர்ஸ்ட் லுக்முத்தையா முரளிதரன்முத்தையா முரளிதரன் பயோபிக்One minute newsBharathirajaBharathiraja press releaseVijay sethupathi800 movie800 movie first lookMuthiah muralidharanVijay sethupathi as muthiah muralidharan

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author