

1986-ஆம் ஆண்டு ரஜினிகாந்தோடு நடித்த 'நான் அடிமை இல்லை' திரைப்படத்துக்குப் பிறகு, கிட்டத்தட்ட 29 ஆண்டுகள் கழித்து 'புலி' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் மறுபிரவேசம் செய்துள்ளார் நடிகை ஸ்ரீதேவி.
படத்தில் ஒரு நாட்டின் ராணியாக நடித்துள்ள ஸ்ரீதேவி, படக்குழு தன்னை நிஜமாகவே ராணி போல நடத்தியதாக கூறியுள்ளார். ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியிலிருந்து:
"'புலி' படப்பிடிப்பு தளத்திலும் என்னை ராணி போலவே நடத்தியது சிறந்த அனுபவமாக இருந்தது. நான் மரியாதைக்குரியவளாக உணர்ந்தேன். பல வருடங்களுக்கு முன் நான் பார்த்த ஸ்டூடியோக்களை இன்று பார்ப்பது பல நினைவுகளை மீண்டும் கொண்டு வந்தது. ஒரு கனவில் வாழ்வது போல உணர்ந்தேன்.
இப்படியான கதாபாத்திரம் வாழ்வில் ஒருமுறை தான் கிடைக்கும். அதனால் பெரிதாக யோசிக்காமல் சம்மதித்தேன். இதுவரை என் வாழ்வில் நான் நடித்திராத பாத்திரமாக இது இருக்கும். இதை மறக்கவே முடியாது.
நான் வில்லி போன்ற பாத்திரத்தில் நடிக்கவில்லை. அந்த பாத்திரத்துக்கு பல நிறங்கள் உள்ளன. மாயாஜாலக் கதைகளில் வரும் ராணியைப் போல அல்ல இது. இதுகுறித்து நான் அதிகம் பேச முடியாது.
நான் அணிந்த ஆடை மிகவும் கனமாக இருக்கும். என் பின்னால் என் ஆடையை பிடித்துக் கொண்டே யாரேனும் வந்தால் தான் என்னால் தளத்துக்கு நடந்து செல்ல முடியும். சவாலாக இருந்தாலும் சந்தோஷமாகவும் இருந்தது.
விஜய், அஜித் போன்ற பிரபல நடிகர்கள் என்னைப் போல மூத்த நடிகர்களோடு நடிக்க முடிவு செய்வது மகிழ்ச்சியாக உள்ளது. அஜித்தோடு இங்க்லிஷ் விங்க்லிஷ் படத்தில் நடித்தேன். அது கவுரவ வேடமாக இருந்தாலும் அவரோடு நடித்தது மறக்க முடியாது. அதே போலதான் விஜய் உடன் நடித்ததும்.
விஜய் தளத்தில் மிகவும் அமைதியாக, தயாராக இருப்பார். எந்த சச்சரவும் இருக்காது. முழு ஈடுபாடோடு நடிப்பதால் உடன் நடிக்கும் அனைவருக்கும் அதைப் பார்க்க உற்சாகமாக இருக்கும்.
ஒவ்வொரு படத்துக்கும் அதற்கென ஒரு வசீகரம் இருக்கும். ஒரு காரணத்துக்காக அந்தப் படம் எடுக்கப்படும். 'புலி'யைப் பற்றி உருவாகியுள்ள எதிர்பார்ப்பு நேர்மறையாக உள்ளது. என்னிடம் பேசிய பலரும் படத்தை ஆவலோட எதிர்பார்க்கின்றனர். தமிழ் சினிமா இதுவரை பார்த்திராத கற்பனையாக இந்தப் படம் இருக்கும். இது அனைவருக்குமான படம்.
தமிழில் தொடர்ந்து நடிக்கும் வகையில் எந்த திட்டமும் என்னிடம் இல்லை. நல்ல கதாபாத்திரங்கள் வந்தால் ஏற்று நடிப்பேன். அவ்வளவு தான்"
இவ்வாறு ஸ்ரீதேவி பேசியுள்ளார்.
விஜய் நாயகனாக நடித்துள்ள புலி அக்டோபர் 1-ஆம் தேதி வெளியாகவுள்ளது. சிம்புதேவன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், சுதீப் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.