ஒரு கிரிக்கெட்‌ வீரரின்‌ வாழ்க்கை படமே; எந்தவித அரசியலும்‌ கிடையாது: '800' சர்ச்சைக்கு படக்குழுவினர் விளக்கம்

ஒரு கிரிக்கெட்‌ வீரரின்‌ வாழ்க்கை படமே; எந்தவித அரசியலும்‌ கிடையாது: '800' சர்ச்சைக்கு படக்குழுவினர் விளக்கம்
Updated on
1 min read

ஒரு கிரிக்கெட்‌ வீரரின்‌ வாழ்க்கை படமே; எந்த வித அரசியலும்‌ கிடையாது என்று '800' படம் தொடர்பான சர்ச்சைக்கு படக்குழுவினர் விளக்கமளித்துள்ளனர்.

முத்தையா முரளிதரன் பயோபிக்கில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 800 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்திருப்பதால், முத்தையா முரளிதரன் பயோபிக் கதைக்கு '800' எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு.

முத்தையா முரளிதரன் பயோபிக்கில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என்று இலங்கைத் தமிழர்கள் சார்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த எதிர்ப்பு சமூக வலைதளத்திலும் எதிரொலித்து வருகிறது. '800' திரைப்படம் மற்றும் விஜய் சேதுபதிக்கு எதிராக ஹாஷ்டேக்குகளை உருவாக்கி ட்ரெண்ட் செய்து வருகிறது. அவை அனைத்துமே இந்திய அளவில் ட்ரெண்ட்டாகி வருவது குறிப்பிடத்தக்கது.

'800' படத்துக்கு எழுந்துள்ள எதிர்ப்பு தொடர்பாக தயாரிப்பு நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"முத்தையா முரளிதரன்‌ வாழ்க்கை வரலாற்றில்‌ விஜய்‌ சேதுபதி நடிக்க இருக்கும்‌ '800' திரைப்படம்‌ பல்வேறு வகையில்‌ அரசியல்‌ ஆக்கப்பட்டு வருவதை அறிகிறோம்‌. '800' திரைப்படம்‌ முழுக்க ஒரு கிரிக்கெட்‌ வீரரின்‌ வாழ்க்கை சம்பந்தப்பட்ட படமே தவிர இதில்‌ எந்த வித அரசியலும்‌ கிடையாது.

தமிழகத்தில்‌ இருந்து தேயிலைத்‌ தோட்டக்‌ கூலியாளர்களாக இலங்கைக்குக் குடிபெயர்ந்த ஒரு சமூகத்திலிருந்து வந்த முரளிதரன்‌ எப்படி பல தடைகளைத்‌ தாண்டி உலக அளவில்‌ சிறந்த பந்து வீச்சாளராக உயர்ந்தார்‌ என்பது தான்‌ இத்திரைப்படத்தின்‌ கதையம்சம்‌. இத்திரைப்படம்‌ இளைய சமுதாயத்துக்கும்‌ வருங்கால விளையாட்டு வீரர்களுக்கும்‌ தங்கள்‌ வாழ்க்கைப்‌ பயணத்தில்‌ எவ்வளவு தடைகள்‌ வந்தாலும்‌ தடைகளைக்‌ கடந்து சாதிக்க முடியும்‌ என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தும்‌ படமாக இருக்கும்‌.

இத்திரைப்படத்தின்‌ தயாரிப்பாளராக ஒன்றை மட்டும்‌ நிச்சயமாகச் சொல்ல முடியும்‌ இத்திரைப்படத்தில்‌ ஈழத்தமிழர்களின்‌ போராட்டத்தை சிறுமைப்படுத்தும்‌ விதத்திலான காட்சியமைப்புகள்‌ கிடையாது. கூடுதலாக இத்திரைப்படத்தில்‌ இலங்கையைச் சேர்ந்த பல தமிழ்‌ திரைத்துறை கலைஞர்கள்‌ மற்றும்‌ தொழில்நுட்ப கலைஞர்கள்‌ பங்குபெற இருக்கின்றனர்‌. அதன்‌ மூலம்‌ இலங்கை தமிழ்‌ திரைத்துறை கலைஞர்களுக்கு தங்கள்‌ திறமையை உலக அரங்கில்‌ வெளிக்‌ காட்ட இந்த படம்‌ நிச்சயமாக ஒரு அடித்தளமிட்டுத்‌ தரும்‌ என்பதை நாங்கள்‌ முழுமையாக நம்புகிறோம்‌.

கலைக்கும்‌ கலைஞர்களுக்கும்‌ எல்லைகள்‌ கிடையாது . எல்லைகளைக் கடந்து மக்களையும்‌ மனிதத்தையும்‌ இணைப்பது தான்‌ கலை. நாங்கள்‌ அன்பையும்‌ நம்பிக்கையும்‌ மட்டுமே விதைக்க விரும்புகிறோம்‌"

இவ்வாறு 800 படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in