

மதுரை விமான நிலையத்தில் வந்து இறங்கிய நடிகர் சிவகார்த்திகேயன் மீது கமல் ரசிகர்கள் எனக் கூறப்படுபவர்கள் தாக்க முயன்றதாலும், லேசாக தாக்கியதாலும் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
திருச்செந்தூரில் உள்ள ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் சிவந்தி ஆதித்தனார் சிலை திறப்பு விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர்கள் கமல்ஹாசன், சிவகார்த்திகேயன், ஹன்சிகா மற்றும் பாடகி சின்மயில் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டார்கள்.
இவ்விழாவில் பங்கேற்பதற்காக கமல்ஹாசன், சிவகார்த்திகேயன், ஹன்சிகா உள்ளிட்ட அனைவருமே இன்று காலையில் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை சென்று அங்கிருந்து காரில் சென்றார்கள். மதுரை விமான நிலையத்தில் கமல்ஹாசன் வெளியேறியதும், சிவகார்த்திகேயன் வெளியே வந்தார்.
அப்போது அங்கிருந்த கமல் ரசிகர்கள் எனச் சொல்லப்படும் சிலர், சிவகார்த்திகேயன் மீது திடீரென தாக்க முயன்றனர். லேசாக தாக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது.
இதனால் சிவகார்த்திகேயன் அங்கிருந்து வேகமாக காருக்கு சென்று விட்டார். இதனை வீடியோ பதிவு செய்தவர்கள் அதனை யூடியூப் தளத்திலும், வாட்ஸ்-அப் மூலமாகவும் பரப்பினார்கள். இந்த வீடியோ பதிவைப் பார்த்தவர்கள் பலரும் அதிர்ச்சியடைந்தார்கள்.
பலரும் ட்விட்டர் தளத்தில் தாக்கியவர்களின் செயலைக் கண்டித்து தங்களது கருத்துக்களைப் பதிவு செய்து வருகிறார்கள். #WeSupportSivakarthikeyan என்ற பெயரில் தங்களது கருத்துக்களைப் பதிவு செய்து வருகிறார்கள்.
இதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களின் இந்த செயலுக்கு நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
அவர் தனது ட்வீட்டில், "உங்களது ஆசியினால் நான் நலமாக இருக்கிறேன். இந்த தருணத்தில் எனக்கு ஆதரவு அளிக்கும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி. உங்கள் அன்பு எனக்கு வலு சேர்க்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நேற்றே தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றில், தான் நலமாக இருப்பதாகவும், எந்த பிரச்சினையும் நடக்கவில்லை என்றும் சிவகார்த்திகேயன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.