

'தனி ஒருவன்' படம் பார்த்துவிட்டு தெலுங்கின் முன்னணி நடிகர் மகேஷ் பாபு அனுப்பிய வாழ்த்து செய்தியால் மிகவும் நெகிழ்ந்து போய் இருக்கிறார் மோகன்ராஜா
மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த்சாமி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் 'தனி ஒருவன்'. ஹிப் ஹாப் ஆதி இசையமைத்து இருக்கும் இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
ஆகஸ்ட் 28ம் தேதி வெளியான இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இப்படத்தின் ரீமேக் உரிமைக்கும் கடும் போட்டி நிலவி வருகிறது. சல்மான்கான், மகேஷ் பாபு, ராம்சரண் என பலர் ரீமேக் உரிமையைக் கைப்பற்றி வருவதாக தகவல்கள் வெளியாகின.
'தனி ஒருவன்' படத்தைப் பார்த்துவிட்டு, "உங்களிடம் ஏதாவது கதையில் இருந்தால் அதில் நடிக்க விரும்புகிறேன்" என்று மோகன் ராஜாவுக்கு மகேஷ் பாபு குறுந்தகவல் அனுப்பி இருக்கிறார். விரைவில் நல்ல கதையோடு உங்களை சந்திக்கிறேன் என்று கூறியிருக்கிறார் மோகன் ராஜா. எப்போதுமே ரீமேக்கில் நடிப்பதை விரும்பாத மகேஷ் பாபு, இப்படத்தின் ரீமேக்கில் நடிக்கவில்லை.
மகேஷ் பாபுவின் குறுந்தகவல் மட்டுமன்றி, பல்வேறு முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் வாழ்த்து செய்தியால் மிகவும் நெகிழ்ந்து போயிருக்கிறார் மோகன் ராஜா.