'அந்தாதூன்' தமிழ் ரீமேக்: தபு கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய்?

'அந்தாதூன்' தமிழ் ரீமேக்: தபு கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய்?
Updated on
1 min read

'அந்தாதூன்' தமிழ் ரீமேக்கில், தபு கதாபாத்திரத்தில் நடிக்க ஐஸ்வர்யா ராயிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது படக்குழு.

ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'அந்தாதூன்'. 2018-ம் ஆண்டு அக்டோபர் 5-ம் தேதி வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், சிறந்த இந்திப் படம், சிறந்த நடிகர் மற்றும் சிறந்த திரைக்கதை ஆகியவற்றுக்கான தேசிய விருதுகளையும் வென்றது.

இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை நடிகர் தியாகராஜன் கைப்பற்றி தயாரிப்புப் பணிகளை மேற்கொண்டு வந்தார். இந்தப் படத்தின் இயக்குநராக ஒப்பந்தமான மோகன் ராஜா விலகிவிட்டார். அதனைத் தொடர்ந்து 'பொன்மகள் வந்தாள்' இயக்குநர் ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கவுள்ளார் என்று அதிகாரபூர்வமாக படக்குழு அறிவித்துவிட்டது.

தற்போது, 'அந்தாதூன்' தமிழ் ரீமேக்கில் தபு கதாபாத்திரத்தில் யார் என்பது குறித்து பல்வேரு முன்னணி நடிகைகளின் பெயர்கள் அடிபட்டன. ஆனால், அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க ஐஸ்வர்யா ராயிடம் படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாகத் தெரிகிறது.

ஷங்கர் இயக்கத்தில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற 'ஜீன்ஸ்' படத்தில் பிரசாந்த் - ஐஸ்வர்யா ராய் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். அந்த நட்பை வைத்து 'அந்தாதூன்' ரீமேக்கில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அவர் சம்மதம் தெரிவித்தவுடன் அதிகாரபூர்வமாக அறிவிக்க படக்குழு காத்திருக்கிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in