இணையத்தில் கசிந்தது கபாலி புகைப்படம் இல்லை: இயக்குநர் ரஞ்சித்
ரஜினி செல்ஃபி எடுத்தது போன்று வெளியாகி இருக்கும் புகைப்படம் 'கபாலி' படத்துடையது இல்லை என இயக்குநர் ரஞ்சித் மறுப்பு தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 17ம் தேதி ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கும் 'கபாலி' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்க இருக்கிறது. ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன் உள்ளிட்ட பலர் ரஜினியுடன் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருக்கும் இப்படத்தை தாணு தயாரிக்க இருக்கிறார்.
இந்நிலையில், நேற்று (செப்டம்பர் 11-ம் தேதி) ஃபேஸ்புக்கிலும், வாட்ஸ்-அப்பிலும் ரஜினி செல்ஃபி எடுத்தது போன்ற ஒரு புகைப்படம் பரவியது. பலரும் 'கபாலி'யில் ரஜினியின் கெட்டப் இதுதான் என்று கூறி பகிர்ந்து வந்தார்கள்.
இதற்கு படக்குழு சார்பில் "அந்த புகைப்படம் 'கபாலி' போட்டோ ஷூட் நடைபெறும் போது எடுத்த புகைப்படம் அல்ல" என்று மறுப்பு தெரிவித்திருக்கிறார்கள்.
இந்நிலையில் ட்விட்டர் தளத்தில் "இப்புகைப்படம் 'கபாலி' ரஜினிகாந்த் தோற்றமா? இப்படம் தீ போல் பரவி வருகிறது" என்று எழுப்பிய கேள்விக்கு இயக்குநர் ரஞ்சித் "இல்லை" என்று ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்திருக்கிறார்.
இதனால், வெளியாகி இருக்கும் புகைப்படம் 'கபாலி' படத்துடையது அல்ல என்று உறுதியாகி இருக்கிறது.
