

முத்தையா முரளிதரன் பயோபிக்கில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், இயக்குநர் சீனு ராமசாமி விஜய் சேதுபதிக்கு கோரிக்கை வைத்து ட்வீட் செய்துள்ளார்.
முத்தையா முரளிதரன் பயோபிக்கில் நாயகனாக நடிக்கவுள்ளார் விஜய் சேதுபதி. சர்வதேச கிரிக்கெட் போட்டியில் முத்தையா முரளிதரன் 800 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஆகையால், இந்தப் படத்துக்கு '800' எனத் தலைப்பிட்டுள்ளனர். 'கனிமொழி' படத்தை இயக்கிய எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்கவுள்ள இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக ஆர்.டி.ராஜசேகர், இசையமைப்பாளராக சாம் சி.எஸ் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.
இன்னும் ஓரிரு நாட்களில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகவுள்ளது. 2021-ம் ஆண்டு ஜனவரியில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.
இந்தப் படம் தொடர்பான தகவல்கள் வெளியானபோதே, இதில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என்று நெட்டிசன்கள் பலரும் கருத்துத் தெரிவித்தார்கள். தற்போது விஜய் சேதுபதி நடிப்பது உறுதியாகி, அறிவிப்பு வெளியாகவுள்ளதால் பலரும் அவருக்கு எதிராக மீண்டும் கருத்துத் தெரிவிக்கத் தொடங்கியுள்ளனர்.
இது தொடர்பாக விஜய் சேதுபதியை நாயகனாக அறிமுகப்படுத்திய சீனு ராமசாமி தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"விஜய் சேதுபதியின் இதயம் உலகத் தமிழர்கள். விஜய் சேதுபதி நடிக்கும் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' திரைப்படம் அதற்குச் சான்று. ஈழத்தமிழர் உள்ளத்திற்கு அருமருந்து. உள்ளங்கைக்கு முத்தம். மக்கள் செல்வா.. நீரே எங்கள் தமிழ்ச் சொத்து அய்யா, நமக்கெதற்கு மாத்தையா? மாற்றய்யா?"
இவ்வாறு சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.
மாற்றய்யா என்பதன் மூலம் விஜய் சேதுபதிக்கு அன்புடன் ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளார் இயக்குநர் சீனு ராமசாமி. அதனை விஜய் சேதுபதி ஏற்பாரா அல்லது முரளிதரன் பயோபிக்கில் நடிப்பதில் உறுதியாக இருப்பாரா என்பது இனிமேல் தெரியவரும்.