

ஆந்திரத்தைப் பூர்வீகமாகக் கொண்ட குடும்பத்தில் பிறந்து தெலுங்கில் மிகவும் வெற்றிகரமான இயக்குநராகி தமிழ்நாட்டிலும் பாலிவுட் திரையுலகிலும் பெரும்புகழ் அடைந்து உலக அளவில் மிகப் பெரிய வசூல் சாதனைகள் செய்த திரைப்படங்களைக் கொடுத்திருப்பவரும் இந்திய சினிமாவின் மதிப்பை சர்வதேச சந்தையில் பன்மடங்கு உயர்த்தியிருப்பவருமான இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி இன்று (அக்டோபர் 10) தன்னுடைய பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.
திரைக் குடும்பம்
ராஜமெளலியின் தந்தை கே.விஜயேந்திர பிரசாத் 1980-களின் பிற்பகுதியில் இருந்து தெலுங்கு சினிமாவின் முன்னணிக் கதாசிரியர். இசையமைப்பாளர் மரகதமணி (கீரவாணி) ராஜமெளலியின் ஒன்றுவிட்ட சகோதரர். இயக்குநராக வேண்டும் என்று விரும்பிய ராஜமெளலி முதலில் தொலைக்காட்சித் தொடர்களை இயக்கினார். மூத்த இயக்குநரும் தயாரிப்பாளருமான கே.ராகவேந்திர ராவ் தயாரித்த 'சாந்தி நியாசம்' என்னும் தொலைக்காட்சித் தொடரை இயக்கியனார் ராஜமெளலி.
என்.டி.ஆர். பேரனை வெற்றி நாயகனாக்கியவர்
என்.டி.ராமராவின் பேரன் ஜூனியர் என்.டி.ஆர் நாயகனாக நடித்த 'ஸ்டூடண்ட் நம்பர் 1' என்னும் திரைப்படத்தின் மூலம் சினிமா இயக்குநராக அறிமுகமானார் ராஜமெளலி. அதுவரை ஒரு சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த ஜூனியர் என்.டி.ஆர் முதல் முறையாக இந்தப் படத்தில்தான் நாயகனாக அறிமுகமாகி இருந்தார். ஆனால், இந்தப் படம் தொடங்கத் தாமதமானதால் அதற்குள் அவர் நாயகனாக நடித்த முதல் படமாக 'நீன்னு சூடாலனி' வெளியாகிவிட்டது. அதே 2001-ம் ஆண்டில் 'ஸ்டூடண்ட் நம்பர் 1' படமும் வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்று ராஜமெளலியின் வருகையை முரசொலி கொட்டி அறிவித்ததோடு ஜூனியர் என்.டி.ஆரையும் ஒரு கதாநாயகனாக நிலைநிறுத்தியது. அடுத்த ஆண்டில் இந்தப் படம் தமிழில் அதே தலைப்பில் மறு ஆக்கம் செய்யப்பட்டது. அதில்தான் சத்யராஜின் மகன் சிபிராஜ் நடிகராகவும் கதாநாயகனாகவும் அறிமுகமானார்.
இரண்டாண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஜூனியர் என்.டி.ஆரை வைத்து 'சிம்மாத்ரி' படத்தை இயக்கினார் ராஜமெளலி. அந்தப் படமும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. அடுத்ததாக நிதின் – ஜெனிலியாவை வைத்து இயக்கிய 'சை' ரக்பி விளையாட்டை மையமாகக் கொண்டது. இந்திய சினிமாவில் யாரும் தொடாத களம் என்பதால் பெரிதும் கவனம் பெற்ற இந்தப் படம் ஓராண்டு காலம் திரையரங்குகளில் ஓடியது.
தொடர் வெற்றிகளும் பன்மொழிப் பரவலும்
இதன் பிறகு பிரபாஸுடன் 'சத்ரபதி' என்னும் ஆக்ஷன் படத்தை இயக்கினார் ராஜமெளலி. இந்தப் படமும் மிகப் பெரிய வெற்றிபெற்றது. ரவிதேஜா - அனுஷ்காவை வைத்து அவர் இயக்கிய 'விக்ரமார்க்குடு' ஆக்ஷன், நகைச்சுவை, சென்டிமென்ட், கவர்ச்சி என ஜனரஞ்சக கலவையாக அமைந்து அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் ஈர்த்து வெற்றிபெற்றது. இதன் தமிழ் மறு ஆக்கமான 'சிறுத்தை' இயக்குநர் சிவாவை தமிழ் சினிமாவுக்குக் கொண்டுவந்ததோடு கார்த்தியின் நட்சத்திர அந்தஸ்துக்கு அடித்தளம் அமைத்த வெற்றிப்படமானது. இதன் இந்தி மறு ஆக்கத்தைப் பிரபுதேவா இயக்க அக்ஷய் குமார் நாயகனாக நடித்திருந்தார். கன்னட மறு ஆக்கத்தில் சுதீப் நடித்தார். ராஜமெளலியின் கதை அனைத்து மொழிகளிலும் வெற்றிபெற்றது.
மீண்டும் ஜூனியர் என்.டி.ஆருடன் கைகோத்தார் ராஜமெளலி. இந்த முறை 'யமதொங்கா' எனும் ஃபேன்டஸி வகைமையைச் சேர்ந்த படத்துக்காக. பிளாக்பஸ்டர் வெற்றியையும் விமர்சகர்களின் பாராட்டையும் பெற்ற படம் இது.
அடுத்ததாக ராம்சரண் தேஜா - காஜல் அகர்வாலை வைத்து ராஜமெளலி இயக்கிய 'மகதீரா' மன்னராட்சி காலப் புனைவுப் படம். தெலுங்கில் அந்த ஆண்டின் மிகப் பெரிய வசூலைக் குவித்த இந்தப் படம் சரித்திரப் புனைவுப் படங்கள் மீதான கவனம் தென்னிந்திய சினிமாவில் அதிகரிக்கக் காரணமாக அமைந்தது. இது தமிழில் மொழிமாற்ற வடிவமான 'மாவீரன்' தமிழ்நாட்டில் வசூலைக் குவித்தது.
நாயகனான நகைச்சுவையாளர்
அதுவரை இளம் கதாநாயகர்களை வைத்து படங்களை இயக்கிவந்த ராஜமெளலி தெலுங்கு சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான சுனிலை நாயகனாக்கி இயக்கிய படம் 'மரியாதா ராமண்ணா'. ஆக்ஷனையும் நகைச்சுவையையும் மையமாகக் கொண்ட இந்தப் படம் ராஜமெளலியின் துணிச்சலுக்கும் தன்னம்பிக்கைக்கும் தக்க பரிசளித்ததுபோல் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.
ஒரு ஈயின் வெற்றிக் கதை
'மாவீரன்' படத்துக்குக் கிடைத்த வரவேற்பால் ஊக்குவிக்கப்பட்ட ராஜமெளலி முதல் முறையாக ஒரே நேரத்தில் உருவாகும் இரட்டை மொழிப் படத்தை (bilingual) உருவாக்கினார். தெலுங்கில் 'ஈகா' என்றும் தமிழில் 'நான் ஈ' என்றும் அந்தப் படத்துக்குத் தலைப்பிடப்பட்டது. அனைத்து வகையிலும் பலமும் செல்வாக்கும் மிக்க மனிதன், ஒரு ஈயால் பழிதீர்க்கப்படுவதை அனைவரையும் ஏற்றுக்கொள்ள வைக்கும் திரை ஜாலத்தை நிகழ்த்தி இரண்டு மொழிகளிலும் மிகப் பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றது.
அனைவரையும் வியக்க வைத்த பிரம்மாண்டம்
இதற்குப் பிறகுதான் ராஜமெளலி தன் வாழ்நாள் சாதனையான 'பாகுபலி' படத்தை இரண்டு பாகங்களாகத் திட்டமிட்டு தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் எடுக்கத் தொடங்கினார். 2015-ல் வெளியான 'பாகுபலி' மன்னராட்சி கால புனைவுப் படங்களுக்குப் புத்துயிரூட்டியது என்று சொல்லலாம். உள்ளடக்கத்திலும் உருவாக்கத்திலும் பிரம்மாண்டத்தை வாரி இறைத்திருந்தார் ராஜமெளலி. தெலுங்கு, தமிழில் மட்டுமல்லாமல் இந்தி, மலையாளம் எனப் பல மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்ட வடிவங்களும் மிகப் பெரிய வசூலைக் குவித்தன. ரசிகர்களோடு விமர்சகர்களையும் வியப்பில் வாய் பிளக்க வைத்தன. சர்வதேச அளவில் வசூல் சாதனைகளை நிகழ்த்தியது 'பாகுபலி'.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வெளியான 'பாகுபலி 2' முதல் பகுதி ஏற்படுத்தியிருந்த தாக்கத்தின் சற்றும் குறையாத தொடர்ச்சியாக அமைந்தது. இதன் இந்திப் பதிப்பின் வெளியீட்டு உரிமையை பாலிவுட்டின் முன்னணி இயக்குநர் - தயாரிப்பாளர் கரண் ஜோஹர் வாங்கியிருந்தார் என்பதிலிருந்து 'பாகுபலி' பிராண்டுக்கு இந்திய அளவில் இருந்த பெரும் மதிப்பை உணரலாம். 'பாகுபலி 2 ' திரைப்படம் ஆயிரம் கோடிகளுக்கு மேல் வசூலித்தது. அமெரிக்கா, ஜப்பான், சீனா உள்ளிட்ட பல உலக நாடுகளில் வசூலைக் குவித்தது.
இந்த இரண்டு படங்களுக்குப் பிறகு ராஜமெளலி இந்திய அளவில் மட்டுமல்லாமல் உலகில் இந்தியத் திரைப்படங்களுடன் ஏதேனும் ஒரு வகையில் தொடர்புடைய அனைவராலும் பெரிதும் மதிக்கப்படும் படைப்பாளியாகிவிட்டார்.
யாரும் நிகழ்த்தாத சாதனை
இதுவரை 11 படங்களை இயக்கியிருக்கிறார் ராஜமெளலி. அனைத்துமே வெற்றிப் படங்கள். இது தவிர ராஜமெளலியில் பெரும்பாலான படங்கள் தமிழ், கன்னடம், இந்தி மொழிகளில் மறு ஆக்கமோ மொழிமாற்றமோ செய்யப்பட்டு அவையும் வெற்றிபெற்றுள்ளன. அவர் இயக்கிய இருமொழிப் படங்களும் இரண்டு மொழிகளிலும் வெற்றிபெற்றுள்ளன. பத்து படங்களுக்கு மேல் இயக்கிய பிறகும் 100 சதவீத வெற்றி விகிதத்தைத் தக்க வைத்திருக்கும் சாதனையை இதுவரை யாரும் நிகழ்த்தியதில்லை. இந்தச் சாதனையை முறியடிக்க இன்னும் பல ஆண்டுகள் ஆகலாம். முறியடிக்கப்படாமலே போகலாம்.
விருதுகளின் நாயகர்
இவருடைய 'ஈகா', பாகுபலி 2' படங்கள் சிறந்த தெலுங்குப் படத்துக்கான தேசிய விருதை வென்றன. 'பாகுபலி' சிறந்த முழுமையான பொழுதுபோக்குப் படம் என்பதற்கான தேசிய விருதை வென்றது. ராஜமெளலி சிறந்த இயக்குநருக்கான தென்னிந்திய ஃபிலிம்ஃபேர் விருதை ஐந்து முறை வென்றுள்ளார். ஆந்திர அரசின் சிறந்த இயக்குநருக்கான நந்தி விருதை மூன்று முறையும் சிறந்த திரைக்கதை ஆசிரியருக்கான நந்தி விருதை ஒரு முறையும் வென்றுள்ளார்.
நட்சத்திரங்கள் மின்னும் வரலாற்றுப் புனைவு
தற்போது பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகப் போராடிய அல்லுரி சீதாராம ராஜு, ஹைதராபாத் நிஜாம் ஆட்சிக்கு எதிராகப் போராடிய கொமாரம் பீம் ஆகியோரின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு 'ஆர்.ஆர்.ஆர்' (RRR) என்னும் பிரம்மாண்ட வரலாற்றுப் புனைவுத் திரைப்படத்தை இயங்கிவருகிறார் ராஜமெளலி. ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண் ஆகிய தெலுங்கு சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களோடு, பாலிவுட் நட்சத்திரம் ஆலியா பட் மட்டுமல்லாமல் புகழ்பெற்ற வெளிநாட்டு நடிகர்களும் நடித்துவரும் இந்தப் படம் தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் என பன்மொழித் திரைப்படமாக உருவாகி வருகிறது. அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சில மாதங்களுக்கு முன் வெளியான இந்தப் படத்தின் டீஸர் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது.
அனைத்து வகைமையைச் சேர்ந்த படங்களை இயக்கி வெற்றிகளைக் கொடுத்துள்ள ராஜமெளலி அரசர் காலக் கதைகள், சரித்திர புனைவுப் படங்களுக்கு இந்திய அளவில் புதிய சந்தையை உருவாக்கி இதே பாணியில் பல படங்கள் உருவாக்கப்படுவதற்கு வித்திட்டிருக்கிறார். அவருடைய வெற்றிகளையெல்லாம் தாண்டி இதுவே இந்திய சினிமாவுக்கு அவருடைய மிகப் பெரிய பங்களிப்பாக இருக்கும். இன்னும் பல வெற்றிப் படங்களை இயக்கி மேலும் பல உயரங்களை அடைந்து மென்மேலும் பல சாதனைகளைப் படைக்க ராஜமெளலியை மனதார வாழ்த்துவோம்.