

'இது நம்ம ஆளு' விவகாரம் தொடர்பாக இயக்குநர் பாண்டிராஜ் மற்றும் சிம்புவின் தம்பி குறளரசன் இருவருக்கும் இடையே மோதல் உருவாகியுள்ளது.
பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா, சூரி நடிப்பில் நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்து வரும் படம் 'இது நம்ம ஆளு'. குறளரசன் இசையமைத்து வரும் இப்படத்தை சிம்பு சினி ஆர்ட்ஸ் வழங்க முதல் பிரதி அடிப்படையில் பாண்டிராஜ் தயாரித்து வருகிறார். 'வாலு' வெளியானதைத் தொடர்ந்து 'இது நம்ம ஆளு' இரண்டு பாடல் பணிகள் முடிக்கப்பட்டு வெளியிடப்படும் என்று சிம்பு தெரிவித்திருந்தார்.
'இது நம்ம ஆளு' பாடல் படப்பிடிப்புக்காக நயன்தாரா தேதிகள் தர மறுக்கிறார் என டி.ஆர் புகார் அளித்திருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், சிம்புவோ "நாங்கள் நயன்தாரா மீது புகார் அளிக்கவில்லை. தயாரிப்பாளர் சங்கம் மூலமாக நயன்தாராவிடம் தேதிகள் கேட்டோம். இது எப்படி புகாராகும்" என்று விளக்கம் அளித்திருந்தார்.
குத்துப் பாடல் விவகாரம்
பாடல்கள் தொடர்பாக இயக்குநர் பாண்டிராஜ் "'இது நம்ம ஆளு' படத்தைப் பொறுத்தவரை படப்பிடிப்பு முடிந்துவிட்டது. டி.ஆர் கூறிவருவது ஒரு குத்துப் பாடலாகும். அப்பாடல் படத்துக்கு தேவையில்லை, நயன்தாரா மற்ற படங்களை விட இப்படத்துக்கு அதிகமான தேதிகளைக் கொடுத்துவிட்டார்" என்று ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இது குறித்து சிம்புவோ "பெரிய நடிகர் - நடிகை நடித்திருக்கும் படம் என்றால் ரசிகர்கள் பாடல்களை எதிர்பார்ப்பார்கள். எனது படங்களில் அனைத்து பாடல்களுக்குமே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இன்றைக்கு எல்லா படங்களிலுமே ஒரு குத்துப் பாடல் இருக்கிறது" என்று பாண்டிராஜின் கருத்துக்கு பதிலடி கொடுத்தார்.
ட்விட்டரில் பாண்டிராஜ் - குறளரசன் மோதல்
இந்நிலையில் செப்டம்பர் 5ம் தேதி இயக்குநர் பாண்டிராஜ், "தம்பி நீ யாருன்னு எனக்கு தெரியும்,நான் யாருன்னு உனக்கு தெரியும்,நாம ரெண்டு பேரும் யாருன்னு ஊருக்கே தெரியும்.தூக்கம் வந்தா போயி தூங்கு போ. ஒரு நல்ல முதலாளிக்கு அழகு,உழைத்தவனின் வியர்வை காய்வதற்குள் ஊதியம் கொடுப்பது.ஒரு வருடம் சென்றாவது கொடுக்கலாமே.
விரைவில் 'இது நம்ம ஆளு' படக்குழுவினருடன் பத்திரிகையாளர்களை சந்தித்து கடந்த இரண்டரை வருடங்களாக எவ்வளவு போராட்டத்தை சந்தித்து வருகிறோம் என கூற இருக்கிறேன்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கோபத்தை வெளிப்படுத்தினார்.
பாண்டிராஜுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சிம்புவின் தம்பி குறளரசன் "தற்போது வரை 'இது நம்ம ஆளு' படத்தின் 1 நிமிட டீஸரை மட்டுமே பார்த்திருக்கிறேன். எப்போது முழுமையான காட்சிகள் கிடைக்கும் என்று தெரியவில்லை. புதுமுக இசையமைப்பாளரை படத்தின் பின்னணி இசையை சில நாட்களில் முடிக்க சொல்கிறார்கள். 5 பாடல்களை 2 மாதங்களுக்கு முன்பாகவே கொடுத்துவிட்டேன். 3 பாடல்கள் மட்டுமே படமாக்கி இருக்கிறார்கள். தயாரிப்பாளர் விரைவில் வெளியீட்டு தேதியை கூறுவார். தற்போது எனது அடுத்த ஆல்பத்தில் பணியாற்றி வருகிறேன். எனக்கு எனது அண்ணன் தான் எல்லாமே. அவர் ஒருவருக்காக மட்டுமே இதை செய்து வருகிறேன்.
நானும் எனது அப்பாவுடன் விரைவில் பத்திரிகையாளர்களை சந்திக்க இருக்கிறேன். எனது வாழ்நாளில் யாருமே என்னை இந்தளவுக்கு அசிங்கப்படுத்தியது இல்லை. 'இது நம்ம ஆளு' இயக்குநர் என்னிடம் இப்பாடல்கள் எல்லாம் நன்றாக இல்லை, யாருமே கேட்க மாட்டார்கள் என்று கூறினார். மக்கள் கேட்டுவிட்டு சொல்லட்டும். எனது அண்ணன், அப்பா, இசையமைப்பாளர் தமன், யுவன் சார், அனிருத் உள்ளிட்டோர் எனக்கு ஆதரவு அளித்து, எனது இசையை பாராட்டி இருக்கிறார்கள்." என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கொந்தளித்திருக்கிறார்.