

நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் அணியான 'பாண்டவர் அணி'க்கே என் ஆதரவு என்று நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்தார்.
விஷால், நாசர், பொன்வண்ணன், கார்த்தி உள்ளிட்ட பலர் இணைந்து 'பாண்டவர் அணி' என்ற பெயரில் நடிகர் சங்கத் தேர்தலில் சரத்குமார் அணிக்கு எதிராக களம் இறங்கியிருக்கிறார்கள். அக்டோபர் 18ம் தேதி சென்னையில் நடிகர் சங்கத் தேர்தல் நடைபெற இருக்கிறது.
இதற்காக 'பாண்டவர் அணி' பல்வேறு முன்னணி நடிகர்கள், நடிகைகளை சந்தித்து ஆதரவுக் கேட்டு வருகிறார்கள். கமல், குஷ்பு உள்ளிட்ட பல்வேறு முன்னணி நடிகர்கள், நடிகைகள் 'பாண்டவர் அணி'க்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்.
இந்நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜும் விஷால் அணிக்கு தனது ஆதரவைத் தெரிவித்திருக்கிறார். நடிகர் சங்கத் தேர்தலில் யாருக்கு ஆதரவு என்று கேட்ட போது, "மாற்றம் ஒன்று தான் மாறாதது. ஒரு இளம் படை உள்ளே வருகிறது. அவர்களுக்கு நாம் இடம் கொடுத்தாக வேண்டும். புதிய இளைஞர்கள், புதிய சிந்தனைகள் வரும் போது தான் நாம் அடுத்த கட்டத்துக்கு நகர முடியும். அப்படி ஒரு மாற்றம் பல வருடங்களுக்குப் பிறகு வந்திருக்கிறது.
மாற்றம் வரும் போது பக்கத்தில் நிற்க வேண்டும், யாரும் மீதும் நான் கூறவோ, சண்டைப் போடவோ விரும்பவில்லை. தனிப்பட்ட முறையில் அனைவருமே எனக்கு நண்பர்கள் தான். என் படிப்பு, தொழில், மனசாட்சி இப்படி அனைத்துமே மாற்றம் தேவைப்படுகிறது என சொல்கிறது. இத்தனை வருடங்களாக நடக்காதது நடக்கும் என நினைக்கிறேன். சும்மா ஒரு அறிக்கைக் கொடுத்து நான் ஒட்டுப் போடுகிறேன் என நான் சொல்லமாட்டேன், மாற்றம் வரும் போது அதை என்னுடைய பொறுப்பாக எடுத்துக் கொண்டு அதற்கு நான் துணையாக நிற்பேன்" என்று தெரிவித்தார் பிரகாஷ்ராஜ்