

நன்றாக ஆடும்போது கொண்டாடுவது மட்டுமல்ல, மோசமான கட்டத்திலும் அவர்களுக்கு ஆதரவு தர வேண்டும் என்று கேதர் ஜாதவுக்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்துள்ளார் பாடலாசிரியர் விவேக்.
துபாயில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டிகளில் அக்டோபர் 7-ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைட்ர்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 167 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய சென்னை அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
இந்தத் தோல்வியால் சமூக வலைதளத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடும் எதிர்வினைகளைச் சந்தித்தது. குறிப்பாக கேதர் ஜாதவின் பேட்டிங்கிற்கு தொடர்ச்சியாக விமர்சனங்களும், கிண்டல்களும் எதிரொலித்தன. இதனால் ட்விட்டர் தளத்தில் #kedarjadhav என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.
இதனிடையே, கேதர் ஜாதவுக்கு எழுந்த விமர்சனங்கள் தொடர்பாக பாடலாசிரியர் விவேக் தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ள பதிவுகளில் கூறியிருப்பதாவது:
"சமூக வலைதளங்களில் நாம் தெரிவிக்கும் கருத்துகள் மற்றவர்களின் கருத்துகளோடு தீவிரமாகக் கலந்து அப்படியே ஒரு நிலச்சரிவைப் போன்ற தாக்கத்தை எப்படி ஏற்படுத்துகிறது என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டாமா?
ஒருவர் மீது ஒரு கிலோ எடையுள்ள கல்லை வைத்தால் பரவாயில்லை, ஆனால் அதேபோல 100 கற்களை அவர் மீது வைத்துவிட்டு அதன்பின் மீண்டும் 1 கிலோ கல்லை வைத்தால் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்.
எனக்கும் ஜாதவ் ஆடிய விதம் பிடிக்கவில்லை. அதுவும் 5 பந்துகளில் 26 ரன்கள் தேவை எனும் போது ஒரு ரன் கூட அவர் எடுக்கவில்லை. ஆனால், அவரது இந்த அணுகுமுறை அவர் மனதிலிருந்த அழுத்தத்தினால் இருக்கலாம். அவர் ஊக்கம் குறைந்திருக்கலாம்.
ஆம். ஒரு விளையாட்டு வீரர் இதைக் கையாள வேண்டும். அதோடு எதிர்த்துப் போராட வேண்டும். அவர் தன்னிலைக்கு வரும் வரை உட்கார வைக்கப்பட்டிருக்கும் இன்னொரு நல்ல திறமையைத் தேர்ந்தெடுக்கலாம்.
ஆனால், எல்லோரும் சேர்ந்து அவர் மீது அவதூறு பேசுவது சரியா? ஜாதவுக்கும் அவரது குடும்பத்துக்கும் என் ஆறுதல்கள். அவர்கள் நன்றாக ஆடும்போது கொண்டாடுவது மட்டுமல்ல, மோசமான கட்டத்திலும் அவர்களுக்கு ஆதரவு தர வேண்டும்.
இது நமக்கு வெறும் ஒரு ட்வீட்டாக இருக்கலாம். ஆனால், இதன் தாக்கம், அதுவும் எல்லோருடைய ட்வீட்டுகளும் சேர்ந்து தரும் தாக்கம் பலரை மொத்தமாக வீழ்த்தும். சென்னை ஐபிஎல் குடும்பத்திலிருந்து ஜாதவுக்கு என் அன்பை அனுப்ப முடிவெடுத்துள்ளேன்".
இவ்வாறு பாடலாசிரியர் விவேக் தெரிவித்துள்ளார்.