

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகவுள்ள புதிய படத்தின் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் 'ஐங்கரன்', 'ஆயிரம் ஜென்மங்கள்', 'அடங்காதே', 'ஜெயில்' உள்ளிட்ட படங்கள் வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளன. மேலும், '4ஜி', 'காதலிக்க யாருமில்லை', 'பேச்சிலர்', 'ட்ராப் சிட்டி' ஆகிய படங்கள் வெளியீட்டுக்குத் தயாராகி வருகின்றன.
சில தினங்களுக்கு முன்புதான் 'பேச்சிலர்' படத்தின் படப்பிடிப்பை முழுமையாக முடித்துக் கொடுத்தார் ஜி.வி.பிரகாஷ். தற்போது அவர் நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன் படப்பூஜை சென்னையில் இன்று (அக்டோபர் 8) நடைபெற்றது.
பல்வேறு முன்னணி இயக்குநர்களிடம் பணிபுரிந்துவிட்டு, சில குறும்படங்கள் மற்றும் பல்வேறு முன்னணிப் படங்களின் கதை விவாதத்தில் கலந்துகொண்ட அகிலன் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். அகிலன் கூறிய கதை ஜி.வி.பிரகாஷுக்கு மிகவும் பிடித்துவிடவே, உடனே தேதிகள் ஒதுக்கியுள்ளார்.
முழுக்கக் காதலை மையப்படுத்திய க்ரைம் த்ரில்லராக இந்தப் படம் உருவாகவுள்ளது. இன்னும் இந்தப் படத்துக்குப் பெயரிடப்படவில்லை. டிசம்பர் முதல் வாரத்தில் சென்னையில் படப்பிடிப்பு தொடங்குகிறது. சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. நவீரா சினிமாஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் இந்தப் படத்தைத் தயாரிக்கவுள்ளது. 55 நாட்களில் ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் முடிக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது.
இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷுடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் இதர நடிகர்கள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.
இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக எம்.ஏ.ராஜதுரை, எடிட்டராக டி. சிவனாதீஸ்வரன், இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.