கரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய தமன்னா

கரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய தமன்னா
Updated on
1 min read

தனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் தற்போது மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளதாகவும் நடிகை தமன்னா கூறியுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் தனது பெற்றோர் இருவருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், அதிர்ஷ்டவசமாக தனக்குக் கரோனா தொற்று இல்லை என்றும் நடிகை தமன்னா சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் கடந்த ஞாயிறு (04.10.20) அன்று தமன்னாவுக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெலுங்கு ஊடகங்களில் தகவல் வெளியானது.

மருத்துவமனை சென்று பரிசோதித்ததில் தமன்னாவுக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவர் ஹைதரபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியானதையடுத்து தமன்னாவின் ரசிகர்கள் பலரும் தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் அவர் விரைவில் குணமடைய வாழ்த்துத் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் தனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் தற்போது மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தமன்னா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

நானும் என்னுடைய குழுவினரும் படப்பிடிப்பு தளத்தில் மிகவும் முன்னெச்செரிக்கையுடன் இருந்த போதிலும் கடந்த வாரம் எனக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டது. தேவையான பரிசோதனைகளுக்கு பிறகு எனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஹைதரபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை மேற்கொண்டேன். முறையான மருத்துவ பராமரிப்பின் காரணமாக காய்ச்சலில் தீவிரம் குறைந்ததால் தற்போது நான் வீடு திரும்பியுள்ளேன்.

கடந்த ஒரு வாரம் கடினமானதாக இருந்தாலும் இப்போது நான் நலமாக இருக்கிறேன். உலகம் முழுவதும் மக்களை பாதித்து வரும் இந்த உடல்நலக் குறைவிலிருந்து முழுமையாக மீள்வேன் என்று நம்புகிறேன். மருத்துவர்கள் அறிவுரைப்படி என்னை நான் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன்.

இவ்வாறு தமன்னா கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in