

'10 எண்றதுக்குள்ள' படத்துக்காக மீண்டும் சொந்த குரலில் டப்பிங் பேசியிருக்கிறார் நடிகை சமந்தா.
விஜய் மில்டன் இயக்கத்தில் விக்ரம், சமந்தா, பசுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் '10 எண்றதுக்குள்ள'. இமான் இசையமைத்திருக்கும் இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்திருக்கிறார். ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் வெளியிட இருக்கிறது. இப்படத்தை அக்டோபர் 21ம் தேதி வெளியிட இருக்கிறார்கள்.
தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் தான் ராஜஸ்தானில் இப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி படமாக்கப்பட்டது.
இந்நிலையில், இப்படத்திற்காக டப்பிங் பேசியிருக்கிறார் சமந்தா. முன்னதாக, கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான 'நீதானே என் பொன்வசந்தம்' படத்தில் சமந்தா டப்பிங் பேசியிருக்கிறார்.
சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி பேட்டியில் ஏ. ஆர். முருகதாஸ் "நான் இயக்கிய 'கத்தி' படத்துக்குக் கூட டப்பிங் பேச சமந்தாவிடம் கேட்டேன். நேரமில்லை என்று கூறிவிட்டார். ஆனால், நான் தயாரித்திருக்கும் படத்துக்கு டப்பிங் பேசியிருக்கிறார்" என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.