

‘ராக்கெட்ரி’ படத்தின் பின்னணி இசைக்காக மேசிடோனியன் சிம்பொனி ஆர்கெஸ்ட்ரா குழுவைப் பயன்படுத்தியுள்ளதாக இசையமைப்பாளர் சாம் சி.எஸ். கூறியுள்ளார்.
இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கையை மையப்படுத்தி ‘ராக்கெட்ரி’ படம் தயாராகி வருகிறது. இதில் நம்பி நாராயணனாக நடிப்பதோடு, படத்தையும் இயக்கி வருகிறார் மாதவன். முதலில் ஆனந்த் மகாதேவனோடு இணைந்து படத்தை இயக்கத் திட்டமிட்டார் மாதவன். ஆனால், கருத்து வேறுபாட்டால் மாதவன் மட்டுமே தற்போது இயக்கி வருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என நான்கு மொழிகளிலும் உருவாகி வரும் இப்படத்துக்கு சாம் சி.எஸ். இசையமைக்கிறார்.
இதுகுறித்து இசையமைப்பாளர் சாம் சி.எஸ். கூறியதாவது:
''மிக முக்கியமான ஒரு படைப்பில் வேலை செய்ய வேண்டுமென்பது எனது நெடுநாளைய கனவாக இருந்தது. 'ராக்கெட்ரி' அதை நனவாக்கியுள்ளது. மேலும் இது உலகத் தரத்தில் உருவாகும் படம் ஆகும். எனவே, நான் இப்படத்திற்கு மிகச்சிறந்த இசையை, பெரும் தரத்துடன் உருவாக்க நினைத்தேன்.
மேசிடோனியன் சிம்பொனி ஆர்கெஸ்ட்ரா குழுவை, இப்படத்திற்குப் பயன்படுத்த அனுமதி தந்த தயாரிப்பாளருக்கு இந்நேரத்தில் நன்றி சொல்லிக்கொள்கிறேன். பல தமிழ், பாலிவுட் மற்றும் அண்டை மாநில மொழிப் படங்களில் தற்போது பணிபுரிந்து வருகிறேன். ஆனால் ‘ராக்கெட்ரி’ பெரும் படைப்பாக, பன்மொழியில் இந்தியா முழுவதும் எதிர்பார்ப்பை உருவாக்கும் உலகத்தரமான படைப்பாக இருக்கும்.
இப்படத்தின் ஒவ்வொரு இழையும் எனக்கு இசையில் பெரும் பொறுப்புணர்வைத் தந்திருக்கிறது. அதனை என் உயிராய் மதித்து இசையைத் தந்திருக்கிறேன். ரசிகர்கள் அதனைக் கொண்டாடுவார்கள் என நம்புகிறேன்''.
இவ்வாறு சாம் சி.எஸ். கூறியுள்ளார்.