

அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களுக்கு நடிகை ஆண்ட்ரியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் 14-ம் தேதி உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் 4 பேர் கொண்ட கும்பலால் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டார். சிகிச்சைக்காக டெல்லி சப்தார் ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அப்பெண் கடந்த செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதற்கு சமூக வலைதளங்களில் பலரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இது ஏற்படுத்திய அதிர்ச்சி குறைவதற்குள் அதே உ.பி.யின் பல்ராம்பூர் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 22 வயதுப் பெண் கூட்டுப் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டுள்ளார்..
இதுபோன்ற சம்பவங்களுக்கு சினிமா, அரசியல் பிரபலங்கள் பலரும் தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களுக்கு எதிராக நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
“பொறுப்பேற்கும் நிலை ஏற்பட்டால் தவிர பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஒழியப்போவதில்லை. ஒரு பெண் தாக்கப்படுவதும், துன்புறுத்தப்படுவதும், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவதும் அவளுடைய தவறு அல்ல. இந்தியாவின் தாய்களே, உங்கள் மகன்களை நெறிப்படுத்துங்கள். அவர்களுக்கு பெண்களை மதிக்கக் கற்றுக்கொடுங்கள்.”
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்தப் பதிவுடன் கீழ்க்கண்ட படத்தையும் ஆண்ட்ரியா பதிவிட்டுள்ளார்.