சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கைக் கதை படமாகிறது

சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கைக் கதை படமாகிறது
Updated on
1 min read

சில்ஸ் ஸ்மிதாவின் வாழ்க்கைக் கதை 'அவள் அப்படித்தான்' என்ற பெயரில் படமாகிறது.

1980, 90-களில் தென்னிந்தியத் திரையுலகில் முன்னணிக் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் சில்க் ஸ்மிதா. பல்வேறு படங்களில், தனிப் பாடல்களில் நடனத்தாலும், நடிப்பாலும் அனைவரையும் கவர்ந்தார். இப்போதும் சில்க் ஸ்மிதாவுக்கென்று தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது.

ஒரு சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்து சிறுவயதில் சாப்பாட்டுக்கே மிகவும் கஷ்டப்பட்ட விஜயலட்சுமி என்ற சில்க் ஸ்மிதா தன்னுடைய வாழ்க்கையில் சந்தித்த போராட்டங்கள் ஏராளம். பல்வேறு திருப்பங்கள் நிறைந்த அவருடைய வாழ்க்கையை 'அவள் அப்படித்தான்' என்ற பெயரில் படமாக்குகிறார்கள்.

காயத்ரி பிலிம்ஸ் சித்ரா லட்சுமணனும், முரளி சினி ஆர்ட்ஸ் எச்.முரளியும் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை பல்வேறு விளம்பரப் படங்களை இயக்கிய மணிகண்டன் இயக்கவுள்ளார். இவர் 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படம் குறித்து இயக்குநர் மணிகண்டன் கூறுகையில், "சில்க் ஸ்மிதாவின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணம் அவருடைய காந்தக் கண்கள். அப்படிப்பட்ட அழகான கண்கள் உடைய ஒரு அழகான பெண்ணை இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்க வைப்பதற்காகத் தேடிக் கொண்டிருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

இதன் படப்பிடிப்பு நவம்பர் மாதம் தொடங்க உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in