Last Updated : 02 Oct, 2020 06:54 PM

 

Published : 02 Oct 2020 06:54 PM
Last Updated : 02 Oct 2020 06:54 PM

முதல் பார்வை: க/பெ.ரணசிங்கம்

வெளிநாட்டில் இறந்துபோன கணவனின் உடலை மீட்டு, தாயகம் கொண்டுவரப் போராடும் சாமானியப் பெண்ணின் கண்ணீர்க் கதை க/பெ. ரணசிங்கம்.

வானம் பார்த்த பூமியாக, பொட்டல் காடாக, வறண்டு போய்க் கிடக்கும் ராமநாதபுரத்தின் ஒரு சிற்றூரில் மக்களின் பிரச்சினைகளுக்காகப் போராடுகிறார் ரணசிங்கம். அங்கிருக்கும் தண்ணீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு வேண்டி மக்களைத் திரட்டிப் போராட்டங்களை நடத்துகிறார். இதனால் அரசு அதிகாரிகளின் பகையைச் சம்பாதிக்கிறார். ஒருகட்டத்தில் தன்னுடன் போராடிக் கொண்டிருந்த அத்தனை பேரும் சுயநலத்தால் விலகி நிற்க, உண்மையான பிரச்சினைக்கு தன்னுடன் யாரும் நிற்கவில்லை என வருத்தப்படுகிறார். மனைவியின் பேச்சைக் கேட்டு வெளிநாடு சென்று வேலை பார்க்கிறார். சுமார் 2 வருடங்களுக்குப் பிறகு அந்தத் துயரச் செய்தி ரணசிங்கத்தின் குடும்பத்தைக் கண்ணீரால் நனைக்கிறது.

துபாயில் வேலை பார்ப்பதற்காகச் சென்ற ரணசிங்கம் ஒரு கலவரத்தில் சிக்கி துப்பாக்கிச் சூட்டில் பலியானதாக செய்தி வருகிறது. ரணசிங்கத்தின் மீது சில வழக்குகள் உள்ளதால் அவர் உடலைச் சொந்த ஊருக்குக் கொண்டு வருவதில் பல்வேறு சிக்கல்கள் எழுகின்றன. அவரின் மனைவி அரியநாச்சி தன் கணவனின் உடலை மீட்க எல்லாவிதப் பிரயத்தனயங்களையும் செய்கிறார். கிராம நிர்வாக அலுவலர், வட்டாட்சியர், மாவட்ட ஆட்சித் தலைவர், எம்எல்ஏ, மத்திய அமைச்சர் என்று எல்லோரிடமும் நடையாய் நடந்து, அலைந்து கோரிக்கை மனு கொடுக்கிறார். அதிகாரிகள் கேட்கும் எல்லா ஆவணங்களையும் கொடுத்து அலுத்துப் போகிறார்.

பல்வேறு அலைக்கழிப்புகளுக்குப் பிறகு தீர்க்கமான முடிவுடன் டெல்லி புறப்படுகிறார். கைக்குழந்தையுடன் கணவனின் உடலை மீட்கப் போராடும் அரியநாச்சி என்ன செய்கிறார், அவரின் கோரிக்கை ஏற்கப்பட்டதா, கணவனின் உடலை அவரால் மீட்க முடிந்ததா, ரணசிங்கத்தின் உடல் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டதா என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது திரைக்கதை.

சுமார் 100 படங்களில் குணச்சித்ர நடிகராக முத்திரை பதித்த நடிகர் பெரிய கருப்பத் தேவரின் மகன் விருமாண்டி இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆகியுள்ளார். மக்கள் பிரச்சினை, தண்ணீர்ப் பிரச்சினையை மண்ணின் தன்மையுடன் மிகவும் துணிச்சலாகவும் எமோஷனலாகவும் பதிவு செய்துள்ளார். வெளிநாட்டில் வேலை செய்யச் சென்றவர்கள் இறந்துவிட்டால் அவர்கள் உடலை மீட்பதில் என்ன மாதிரியான சட்டச் சிக்கல்கள் நிகழும் என்பதில் அவர் கொடுத்திருக்கும் டீட்டெய்லிங் அதிர்ச்சி அளிக்கிறது. முதல் படம் என்று நம்பமுடியாத அளவுக்கு அபாரத் திறமையால் அப்ளாஸ் அள்ளுகிறார்.

'சீதக்காதி' படத்துக்குப் பிறகு இன்னொரு பரிசோதனை முயற்சிக்குத் தன்னை ஒப்புக் கொடுத்திருக்கிறார் விஜய் சேதுபதி. அந்தவகையில் அவரின் பங்களிப்பைப் பாராட்டியே ஆக வேண்டும். ஊரில் நீரோட்டம் பார்ப்பது, மக்களை ஒன்றுதிரட்டிப் போராடுவது, உரிமைக்காகக் குரல் கொடுப்பது என ரணசிங்கம் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி பக்காவாகப் பொருந்துகிறார். அரியநாச்சியான ஐஸ்வர்யா ராஜேஷ் மீதான அன்பை வெளிப்படுத்துவது, குறும்பு செய்வது, நகைச்சுவையிலும் ஒரு கை பார்ப்பது என கமர்ஷியல் ஹீரோவாகவும் நியாயமான நடிப்பை நல்கியுள்ளார். கருத்து சொல்லியே இன்னொரு கனியாக மாறிவிடுவாரோ என்று நினைத்து பயந்தால் சட்டென சுதாரித்துக்கொண்டு கலகலப்பூட்டுகிறார்.

சற்றே நீட்டிக்கப்பட்ட கவுரவக் கதாபாத்திரம் போன்று தோற்றம் அளிக்காத அளவுக்கு முக்கால்வாசிப் படம் வரைக்கும் விஜய் சேதுபதி வரும் மாதிரியான காட்சிகளை அமைத்த இயக்குநரின் புத்திசாலித்தனத்தையும் பாராட்டியே ஆக வேண்டும்.

அரியநாச்சியாக ஐஸ்வர்யா ராஜேஷ் கச்சிதமான நடிப்பை வழங்கியுள்ளார். 'காக்காமுட்டை', 'கனா' போன்ற படங்களில் ஐஸ்வர்யா ராஜேஷ் தேர்ந்த நடிப்பை வழங்கினார். ஆனால், அதற்கும் ஒருபடி மேலேபோய் பெண் மையப் படங்களில் உணர்வுபூர்வமாக நடிக்கவும், பரிபூரணமான நடிப்பை வெளிப்படுத்தவும் தனக்குக் கிடைத்த வாய்ப்பை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார். விஜய் சேதுபதியுடனான காதல், குடும்பத்தின் மீதான பிடிப்பு, எதிர்ப்புக் குணம், தனி மனுஷியாகப் போராடுவது என அவர் நடிப்பு கெரியரில் அடுத்தகட்டப் பாய்ச்சலை நிகழ்த்தியுள்ளார். இரண்டாம் பாதியைத் தன் தோள்களில் தாங்கி அழுத்தமான நடிப்புக்கு மரியாதை செய்துள்ளார்.

விஜய் சேதுபதியின் தங்கையாக பவானிஸ்ரீ இயல்பான நடிப்பை வழங்கியுள்ளார். இரண்டாவது படத்திலும் ரங்கராஜ் பாண்டே ஸ்கோர் செய்துள்ளார். வழக்கமான பந்தா எம்எல்ஏவாக நமோ நாராயணா நடித்துள்ளார். 'பூ' ராமுவும், வேலராமமூர்த்தியும் குணச்சித்ர நடிப்பால் மனதில் நிறைகிறார்கள். அருண்ராஜா காமராஜ், சுப்பிரமணிய சிவா, முனீஸ்காந்த், அபிஷேக், டி.சிவா, இயக்குநர் மனோஜ்குமார் ஆகியோர் பொருத்தமான பாத்திர வார்ப்பில் மிளிர்கிறார்கள்.

ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவு ராமநாதபுரம் கிராமத்தின் வறட்சியையும், மண்ணின் சூழலையும் கண்களுக்குள் கடத்துகிறது. ஜிப்ரான் இசையில் பறவைகளா பாடல் வாழ்வாதாரம் தேடி வெளிநாடு செல்லும் மனிதர்களின் துயரத்தைப் பகிர்கிறது. புன்னகையே பாடல் கதையோட்டத்துடன் பொருந்தி நிற்கிறது. பின்னணி இசையில் ஜிப்ரானின் உழைப்பு மெச்சும்படி உள்ளது.

''2000 பேருக்கு வேலை போட்டுக் கொடுத்துட்டு விவசாயம் பண்ற 50,000 பேரை தெருவுல நிப்பாட்டுனா எப்படி சார்'', ''ரேஷன் கார்டு நம்ம ஸ்டேட் எல்லையைத் தாண்டி தாங்காது.. ஆதார் கார்டு எங்கே செல்லும் செல்லாதுன்னே தெரியாது'', ''நம்ம ஊரு பொம்பளைங்க தண்ணிவண்டி தள்ளிக்கிட்டு இருக்காங்க, அந்த கரெண்ட் கம்பெனிக்காரன் ஒரு லட்சம் லிட்டர் தண்ணி எடுக்குறான் பிளேட் கழுவறதுக்கு'', ''அதிகாரத்தோட உச்சாணிக் கொம்புல இருக்குறவங்களுக்கு நாம அடிபட்டதோட வலியை கொஞ்சம் கூட குறையாம அப்படியே புரியவைக்கணும்'' என்ற சண்முகம் முத்துசாமியின் வசனங்கள் படத்துக்குப் பலம் சேர்க்கின்றன.

ராமநாதபுரம் மாவட்டத்தில் தண்ணீர்ப் பஞ்சம் எதனால் ஏற்பட்டது, கருவேலங்காடுகளால் வந்த பிரச்சினை என்ன, விவசாயம் செய்ய முடியாமல் போனதற்கு என்ன காரணம் என்பதை நூல் பிடித்தாற்போல் பதிவு செய்து திரைக்கதையில் கனம் கூட்டியுள்ளார் இயக்குநர் விருமாண்டி. கரெண்ட் கம்பெனி என்பதை வெறுமனே சொல்லிவிட்டு அதில் உள்ளூர் ஆட்களை வேலைக்குச் சேர்வதுபோல் சேர்த்து பின் நீக்கிவிட்டு, வெளியூர் ஆட்களையும், வடநாட்டு ஆட்களையும் வேலைக்கு வைப்பதின் உள்நோக்கத்தையும் நுட்பமாகச் சொல்லி இருக்கிறார்.

பிழைப்புக்காக வெளிநாடு செல்பவர்கள் அசம்பாவிதங்களால் மரணம் அடைந்துவிட்டால் அவர்களை அங்கேயே அடக்கம் செய்வது ஏன், உடலைக் கொண்டுவருவதில் உள்ள சிக்கல் என்ன, இன்சூரன்ஸ் கிடைப்பதில் உள்ள பிரச்சினை என்ன, அதைச் சுற்றியுள்ள ஏஜெண்ட் பின்னணி ஆகியவற்றையும் வலியுடன் பதிவு செய்துள்ளார். சமகால சமூக அரசியல் பிரச்சினைகளைப் பிரதிபலிப்பது போன்ற காட்சிகளை இயக்குநர் சாமர்த்தியமாகக் கையாண்டுள்ளார். வெளிநாட்டில் இறந்த நடிகையின் உடல் 72 மணி நேரங்களில் தாயகம் கொண்டுவரப்படுவதையும் இயக்குநர் போகிற போக்கில் பொட்டில் அடித்தாற்போல் சொல்லி இருக்கிறார்.

அதேசமயம் படத்தின் நீளம் மிகப்பெரிய பின்னடைவு. மூன்று மணி நேரம் கதைக்களத்துக்குத் தேவையில்லை. அதில் கொஞ்சம் கத்தரி போட்டிருக்கலாம். தண்ணீர்ப் பிரச்சினையைப் பேசும் படம் திடீரென்று தடம் மாறுகிறது. விஜய் சேதுபதி வெளிநாட்டுக்கு வேலை செய்யச் செல்வதாக உடனே ஒப்புக்கொள்வது நம்பும்படி இல்லை. ஒரு கிராமத்தில் தண்ணீர்ப் பிரச்சினையைத் தீர்க்கப் பேசும் விஜய் சேதுபதி அப்படியே ஜம்ப் ஆகி அரசியல் வசனம் பேசுவதெல்லாம் திணிக்கப்பட்டதாகவே தெரிகிறது. அதிகாரத்தின் உச்ச வரம்பில் இருக்கும் ஒருவரைப் பார்க்கும் முன்புதான் ஐஸ்வர்யா ராஜேஷை ஊடகங்கள் கவனிப்பதாகவும் அதற்குமுன் அவரைக் கண்டுகொள்ளவே இல்லை என்று காட்டுவதும் உறுத்தல். மனித உரிமை ஆணையம் பற்றி எதுவும் சொல்லப்படவில்லை.

இந்தக் குறைகளைத் தவிர்த்துப் பார்த்தால் தமிழ் சினிமாவின் தரமான படமாக, அழுத்தமான உண்மைகளைப் பேசும் படமாக, சாதாரணக் குடும்பத்தின் வலிகளை, கையறு நிலையை உணர்த்தும் படமாக க/பெ.ரணசிங்கம் முத்திரை பதிக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x