சத்திய சோதனை ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

சத்திய சோதனை ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
Updated on
1 min read

பிரேம்ஜி நாயகனாக நடித்துள்ள சத்திய சோதனை படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.

விதார்த், ரவீனா ரவி, ஜார்ஜ் மரியான் மற்றும் பல புதுமுக நடிகர்கள் நடிப்பில் உருவான படம் 'ஒரு கிடாயின் கருணை மனு'. ஈராஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியான இந்தப் படத்தின் மூலம் சுரேஷ் சங்கையா இயக்குநராக அறிமுகமானார். இந்தப் படத்தின் கதையோட்டம், வசனங்கள், திரைக்கதைக்காக பல்வேறு விருதுகள் கிடைத்தன. ஜூன் 2, 2017-ல் இந்தப் படம் வெளியானது.

அதற்குப் பிறகு மீண்டும் கிராமத்துப் பின்னணியில், முழுக்க காமெடி பாணியில் கதையொன்றைத் தயார் செய்தார் சுரேஷ் சங்கையா. இதில் பிரேம்ஜி நாயகனாக நடித்துள்ளார். முழுக்க காமெடிப் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு 'சத்திய சோதனை' எனப் பெயரிட்டுள்ளது படக்குழு.

தற்போது 'சத்திய சோதனை' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார். இதற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்தப் படத்தில் ஸ்வயம் சித்தா, 'பிக் பாஸ்' ரேஷ்மா, ஞானசம்பந்தம், கே.ஜி.மோகன், ஹலோ கந்தசாமி உள்ளிட்ட பலர் பிரேம்ஜியுடன் நடித்துள்ளனர்.

இதில் மிக முக்கியக் கதாபாத்திரத்தில் லட்சுமி பாட்டி நடித்துள்ளார். பிரேம்ஜிக்கும் லட்சுமி பாட்டிக்கும் இடையே நடக்கும் காட்சிகள் மிகச் சுவாரஸ்யமாக இருக்கும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. ஒரே கட்டமாக மொத்தப் படப்பிடிப்பையும் முடித்து இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக சரண் ஆர்வி, எடிட்டராக வெங்கட் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். சமீர் பரத்ராம் தயாரித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in