

இணையத்தில் தொடர்ந்த கிண்டல் பதிவுகளுக்கு ஷிவானி பதிலடிக் கொடுத்துள்ளார்.
’ரெட்டை ரோஜா’ சீரியல் மூலம் பிரபலமானவர் ஷிவானி நாராயணன். இந்த சீரியலைத் தொடர்ந்து சமூக வலைதளத்தில் மிகவும் பிரபலமானார். அவர் வெளியிடும் போட்டோ ஷூட் புகைப்படங்கள், பாடல்கள், நடனங்கள் என அனைத்துமே வைரலாகி வந்தன.
இதனிடையே, பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் கூட இவர் போட்டியாளராக உள்ளே சென்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அக்டோபர் 4-ம் தேதி யாரெல்லாம் பிக் பாஸ் போட்டியாளர்கள் என்பது தெரிந்துவிடும்.
இதனிடையே, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிண்டல் செய்தும், ஆபாசமாகத் திட்டியும் கருத்து தெரிவிப்பவர்களைக் கடுமையாக சாடியுள்ளார் ஷிவானி நாராயணன். அதில் அவர் கூறியிருப்பதாவது:
"என்னுடைய பதிவுகளில் மூன்றாம் தர பின்னூட்டங்களை இடும் பிறவிகளுக்கும், அடுத்தவர்களைப் பற்றி கேவலமான கருத்தை வெளிப்படுத்தி அதன் மூலம் பணம் சம்பாதிக்கும் சில யூ-டியூப் ட்ரோல் பக்கங்களுக்குமே இந்த பதிவு... இது போன்ற மலிவான கேலிகளின் பின்னணியில் பெண்குரல் ஒலிப்பது பரிதாபமாக உள்ளது. உங்களுக்கு வெட்கமாக இல்லையா?
நான் என்ன உடை உடுத்த வேண்டும், எதை உடுத்தக் கூடாது எனத் தீர்மானிப்பது எனது உரிமை. என்னுடைய வளர்ப்பு பற்றியும் என் குடும்பத்தைப் பற்றியும் தவறாகப் பேசி கமெண்ட் இடுபவர்களுக்கு - என்னுடைய விஷயங்களை நான் தேர்வு செய்துகொள்ளும் அளவுக்குச் சுதந்திரத்துடன் என்னை என் பெற்றோர் நல்ல முறையிலேயே வளர்த்துள்ளனர்.
நான் பதிவிடும் படங்கள், நான் நடனமாடும் அல்லது பாடும் முறை அனைத்தும் என்னுடைய விருப்பத்தின் பேரில் செய்பவை, மற்றவர்களை ஈர்ப்பதற்காக அல்ல. அது எனக்குத் தேவையும் இல்லை. என் உடலைப் பற்றி கேலி செய்வது, என்னுடைய வயதை ஒப்பிடுவது போன்றவை எல்லாம் என்னை எப்போதும் காயப்படுத்தாது. முயற்சி செய்யாதீர்கள், தோற்றுப் போவீர்கள்.
இறுதியாக, இது உங்கள் வேலையும் இல்லை. பின்னூட்டமிட ஆயிரக்கணக்கான நல்ல உள்ளங்கள் இருக்கும்போது உங்களைப் போன்ற கேவலமானவர்களுக்காக நான் எனது பின்னூட்ட பகுதியை மூடப்போவதுமில்லை. உங்களைப் போன்ற இழிந்த எண்ணம் கொண்டவர்கள் வளர வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்”
இவ்வாறு ஷிவானி நாராயணன் தெரிவித்துள்ளார்.