எஸ்பிபியும் நானும் ஒரு முழு இசை நிகழ்ச்சியை திட்டமிட்டிருந்தோம் - ஏ.ஆர். ரஹ்மான்

எஸ்பிபியும் நானும் ஒரு முழு இசை நிகழ்ச்சியை திட்டமிட்டிருந்தோம் - ஏ.ஆர். ரஹ்மான்
Updated on
1 min read

எஸ்பிபியுடன் இணைந்து ஒரு முழு இசை நிகழ்ச்சியை திட்டமிட்டிருந்ததாக ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார்.

பாடும் நிலா என்று அழைக்கப்பட்ட எஸ்.பி.பாலசுப்பிரமணியம் செப்டம்பர் 25-ம் தேதி சென்னையில் காலமானார். செப்டம்பர் 26-ம் தேதி அவருடைய உடல் அரசு மரியாதையுடன் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அவருடன் பணிபுரிந்த பிரபலங்கள், அவர் குரலில் பாடிய பாடகர்கள் என பலரும் அவருடனான நினைவுகளை பேட்டிகள், காணொலிகள் வாயிலாக பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ‘தி இந்து’ ஆங்கில இணையதளத்துக்கு ஆன்லைன் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் எஸ்பிபியுடன் இணைந்து ஒரு முழு இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்த திட்டமிட்டிருந்ததாக கூறியுள்ளார்.

அந்த காணொலியில் அவர் கூறியுள்ளதாவது:

கடந்த ஜனவரி மாதம் ‘டூயட்’ படத்தில் இடம்பெற்ற ‘என் காதலே’ பாடலை ஒரு நிகழ்ச்சியில் பாடும் வீடியோ க்ளிப் ஒன்றை பார்க்க நேர்ந்தது. படம் வெளியான போது பாடியதைப் போலவே இத்தனை ஆண்டுகள் கழித்தும் அப்படியே பாடியிருந்தார். உடனே நான் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ‘கடந்த பத்து ஆண்டுகளில் நான் இசையமைக்காத படங்களில் நீங்கள் பாடல்களை தொகுத்து நாம் ஏன் ஒரு அன்ப்ளக்ட் இசை நிகழ்ச்சியை நடத்தக் கூடாது? என்று கேட்டேன்.

அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்து உடனே அதற்கு சம்மதித்தார். நாங்கள் இருவரும் அதற்கான முயற்சிகளில் இறங்கி கிட்டதட்ட அதற்காக எல்லா ஏற்பாடுகளையும் முடித்திருந்தோம். ஆனால் கரோனாவால் அது தடைப்பட்டது. அவர் இழப்பை நினைத்து வருத்தப்பட்டு எந்த பலனும் இல்லை. நாம் அவரை கொண்டாடி தீர்க்க வேண்டும்.

இவ்வாறு ஏ.ஆர். ரஹ்மான் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in