

செப்டம்பர் 17-ம் தேதி வெளியீட்டில் இருந்து 'புலி' பின்வாங்கியதைத் தொடர்ந்து 'ரஜினி முருகன்', 'மாயா' மற்றும் 'த்ரிஷா இல்லனா நயன்தாரா' ஆகிய படங்கள் வெளியாக திட்டமிட்டு இருக்கிறார்கள்.
சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் 'புலி' படத்தின் கிராபிக்ஸ் பணிகள் மற்றும் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. செப்.17ம் தேதி வெளியீட்டில் இருந்து கிராபிக்ஸ் பணிகள் தாமதத்தால், அக்டோபர் 1-ம் தேதி வெளியாக இருக்கிறது.
'புலி' வெளியீட்டில் பின்வாங்கியதைத் தொடர்ந்து, பல்வேறு படங்கள் அத்தேதியில் வெளியிட தங்களது இறுதிகட்டப் பணிகளை தீவிரப்படுத்தி இருக்கிறார்கள். 'ரஜினி முருகன்', 'மாயா', 'உனக்கென்ன வேணும் சொல்லு' மற்றும் 'த்ரிஷா இல்லனா நயன்தாரா' ஆகிய படங்கள் தங்களது வெளியீட்டை செப்.17ம் தேதி உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்.
இதில், 'ரஜினி முருகன்' படத்தை வேந்தர் மூவிஸ் நிறுவனமும், 'மாயா' படத்தை ஸ்ரீதேனாண்டாள் மூவிஸ் நிறுவனமும், 'த்ரிஷா இல்லனா நயன்தாரா' படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் வெளியிட இருக்கிறார்கள்.
முதலில் அனுஷ்கா நடித்திருக்கும் 'ருத்ரமாதேவி' செப்.17 வெளியீடாக இருந்தது. 3டி பணிகள் முடிவடையாததால் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம், தாங்கள் வாங்கியிருக்கும் இன்னொரு படமான 'மாயா'வை அதே தேதியில் வெளியிட இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நான்கு படங்கள் போக மேலும் பல்வேறு படங்கள் செப்.17ம் தேதியை கணக்கில் கொண்டு பணியாற்றி வருகிறார்கள். ஆகையால் இன்னும் இரண்டு படங்கள் இக்கூட்டணியில் இணைந்தாலும் ஆச்சர்யப்படுவத்திற்கில்லை.