

'பெல்லி சூப்புலு' தமிழ் ரீமேக் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைப் படக்குழு வெளியிட்டுள்ளது.
விஜய் தேவரகொண்டா நடிப்பில் 2016-ம் ஆண்டு வெளியான தெலுங்குப் படம் ‘பெல்லி சூப்புலு’. தருண் பாஸ்கர் இயக்கிய இந்தப் படத்தில், ரீத்து வர்மா நாயகியாக நடித்திருந்தார். ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற இந்தப் படம், இந்தி மற்றும் மலையாளத்தில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.
இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் குறித்த சர்ச்சை நீண்ட நாட்களாகப் பேச்சுவார்த்தையில் இருந்தது. இறுதியில் அனைத்தும் சரிசெய்யப்பட்டு ஹரிஷ் கல்யாண் நாயகனாக நடிக்கப் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. ஏ.எல்.விஜய்யிடம் இணை இயக்குநராகப் பணிபுரிந்த கார்த்திக் சுந்தர் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
நாயகியாக ப்ரியா பவானி சங்கர் நடிக்க சென்னையில் ஒரே கட்டமாகப் படப்பிடிப்பை முடித்தது படக்குழு. ஒளிப்பதிவாளராக கிருஷ்ணன் வசந்த், இசையமைப்பாளராக விஷால் சந்திரசேகர் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.
தற்போது இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை 'பெல்லி சூப்புலு' நாயகன் விஜய் தேவரகொண்டா மற்றும் இயக்குநர் தருண் பாஸ்கர் இருவரும் இணைந்து வெளியிட்டுள்ளனர். 'ஓ மணப்பெண்ணே' என்ற பெயரில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது.
கரோனா அச்சுறுத்தல் முடிந்து திரையரங்குகள் திறக்கப்பட்டவுடன் 'ஓ மணப்பெண்ணே' வெளியாகும் எனத் தெரிகிறது.