

'தலைவி' படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்படவுள்ளது. இதற்காக கங்கணா ஆயத்தமாகி வருகிறார்.
விஜய் இயக்கத்தில் கங்கணா ரணாவத், அரவிந்த் சுவாமி, மதுபாலா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'தலைவி'. இந்தப் படம் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு கரோனா அச்சுறுத்தலால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. க்ளைமாக்ஸ் காட்சிகளும், பாடலும் படமாக்கப்பட வேண்டியதுள்ளது. இதர காட்சிகள் அனைத்தையும் முடித்து, இறுதிகட்டப் பணிகளையும் முடித்துவிட்டது படக்குழு.
தற்போது படப்பிடிப்புக்கு அனுமதி கிடைத்திருக்கும் நிலையில், 'தலைவி' படத்தின் படப்பிடிப்பு பாடல் காட்சிகளுடன் அடுத்த வாரம் தொடங்கவுள்ளார்கள். இதற்காக நடன உதவி இயக்குநருடன் இணைந்து தீவிர நடன பயிற்சி எடுத்துள்ளார் கங்கணா ரணாவத்.
மேலும், 'தலைவி' படப்பிடிப்புக்காக தென்னிந்தியா வரவுள்ளதைத் தனது ட்விட்டர் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில் கங்கணா கூறியிருப்பதாவது:
"நண்பர்களே, இன்று மிகவும் விசேஷமான நாள், 7 மாதங்களுக்கு பிறகு மீண்டும் பணியைத் தொடங்குகிறோம். நான் மிகவும் பேராவலுடன் காத்திருக்கும் இருமொழி திரைப்படமான தலைவி படப்பிடிப்புக்காக தென்னிந்தியாவுக்கு பயணம் மேற்கொள்கிறேன். இந்த கரோனா தொற்று சோதனை காலத்தில் உங்கள் ஆசீர்வாதங்கள் தேவை. இன்று காலை க்ளிக் செய்த செல்ஃபி, உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்"
இவ்வாறு கங்கணா ரணாவத் தெரிவித்துள்ளார்.