எஸ்பிபி போல் அடுத்தவர் நலனில் அக்கறை கொண்ட ஒரு மனிதரை நான் பார்த்ததே இல்லை: சித்ரா

எஸ்பிபி போல் அடுத்தவர் நலனில் அக்கறை கொண்ட ஒரு மனிதரை நான் பார்த்ததே இல்லை: சித்ரா
Updated on
1 min read

இப்படி ஒரு சூழ்நிலை வரும் என்று எதிர்பார்க்கவே இல்லை என்று எஸ்பிபியின் நினைவஞ்சலிக் கூட்டத்தில் பாடகி சித்ரா உருக்கமாகப் பேசினார்

இந்தியத் திரையுலகின் முன்னணிப் பாடகரான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் செப்டம்பர் 25-ம் தேதி சென்னையில் காலமானார். அவருடைய மறைவு திரையுலகினர், இசை ரசிகர்கள் உள்ளிட்ட அனைவரது மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நேற்று (செப்டம்பர் 30) எஸ்பிபியின் நினைவஞ்சலிக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் பெரும்பாலான நடிகர்கள் கலந்துகொண்டு எஸ்பிபி பற்றிய தங்களுடைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் பாடகி சித்ரா பேசியதாவது:

''இப்படி ஒரு சூழ்நிலை வரும் என்று எதிர்பார்க்கவே இல்லை. 'புன்னகை மன்னன்' பாடல் பதிவின்போதுதான் எஸ்பிபி சாரை முதன்முதலில் சந்தித்தேன். அன்று முதல் 2015 ஆம் ஆண்டு வரை அதிகமான பாடல்களை அவரோடு சேர்ந்துதான் பாடியுள்ளேன். அந்த அனுபவத்தில் நான் நிறையக் கற்றுக்கொண்டேன். தமிழ், தெலுங்கு உச்சரிப்புகள் எல்லாம் அவர்தான் எனக்குக் கற்றுக் கொடுத்தார். அவர் கைப்பட எழுதிக் கொடுத்தவை என்னிடம் இன்னும் இருக்கின்றன.

அதுமட்டுமின்றி சக மனிதர்களிடம் நடந்துகொள்ளும் விதமாகட்டும், இசைக்குழுவில் வாசிப்பவர்களை அடையாளம் கண்டுகொள்வதாகட்டும், அனைத்தையும் அவரிடம் இருந்து கற்றுக்கொண்டேன்.

அமெரிக்காவில் ஒரு இசை நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தோம். அங்கு வெள்ளி, சனி, ஞாயிறு என மூன்று நாட்கள் வெவ்வேறு ஊர்களில் நிகழ்ச்சிகள் நடந்தன. வெள்ளி, சனி, நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு ஞாயிற்றுக்கிழமை வேறொரு ஊருக்குச் சென்றோம். அங்கு நாங்கள் தங்கவேண்டிய ஹோட்டலில் எஸ்பிபி சாருக்கு ரூம் ரெடி செய்து கொடுத்தனர்.

ஆனால், மற்ற இசைக்கலைஞர்களுக்கு இன்னும் அறை ரெடியாகவில்லை என்று கூறி அவர்களைக் காத்திருக்கச் செய்தனர். ஆனால், எஸ்பிபி நானும் காத்திருக்கிறேன். ஏனெனில் நான் சென்று விட்டால் இவர்களைக் கவனிக்காமல் விட்டுவிடுவீர்கள் என்று கூறி அவர்களுடனே காத்திருந்தார். அவர் போன்ற அடுத்தவர் நலனில் அக்கறை கொண்ட ஒரு மனிதரை நான் பார்த்ததே இல்லை''.

இவ்வாறு சித்ரா பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in