

நாம் ஒன்றை அதிகமாக நேசித்தால் நாமும் அதுவாகவே மாறிவிடுகிறோம் என்று சொல்வார்கள். எஸ்பிபி சார் கலையின் வடிவமாக இருக்கிறார் என்று விஜய் சேதுபதி புகழாஞ்சலி செலுத்தினார்.
இந்தியத் திரையுலகின் முன்னணிப் பாடகரான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் செப்டம்பர் 25-ம் தேதி சென்னையில் காலமானார். அவருடைய மறைவு திரையுலகினர், இசை ரசிகர்கள் உள்ளிட்ட அனைவரது மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நேற்று (செப்டம்பர் 30) எஸ்பிபியின் நினைவஞ்சலிக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் பெரும்பாலான நடிகர்கள் கலந்துகொண்டு எஸ்பிபி பற்றிய தங்களுடைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் நடிகர் விஜய் சேதுபதி பேசியதாவது:
''என் வாழ்க்கையில் எப்போதும் எதையும் இழந்தது போன்ற உணர்வு எனக்கு இருந்ததில்லை. நான் முதன்முதலில் நடிகனானபோது என்னை கட்டிப்பிடித்து வாழ்த்த என்னுடைய அப்பா இல்லையே என்ற ஏக்கம் எனக்கு இருந்தது. அதன்பிறகு பெரிய வருத்தமென்று எனக்கு எதுவும் கிடையாது. ஆனால், எஸ்பிபி சார் இறந்துவிட்டார் என்று கேள்விப்பட்டபோது அவரை இதுவரை நேரில் பார்க்கவில்லையே என்ற வருத்தம் அதிகமாக இருந்தது.
‘திருடன் போலீஸ்’ படத்தின் பூஜையின்போது அவரைப் பார்க்க விரும்பினேன். ஆனால், அவரைப் பார்க்க முடியாமல் போனது என்னுடைய மிகப்பெரிய துரதிர்ஷ்டமாக நினைக்கிறேன். பஞ்சு அருணாச்சலத்தின் மகன், எஸ்பிபி சரண், வெங்கட் பிரபு இவர்கள் எல்லாம் என்னிடம் எஸ்பிபி சாரைப் பற்றிப் பேசும்போது எனக்கு மிகவும் பொறாமையாக இருக்கும். அவரது பக்கத்தில் இருக்கும் வாய்ப்பு இவர்களுக்குக் கிடைத்துள்ளதே என்று. எப்படி ஒரு மனிதரால் குரல், குடும்பம், நட்பு என எல்லா விஷயத்திலும் சிறந்தவராக இருக்க முடிந்தது என்று தெரியவில்லை.
நாம் ஒன்றை அதிகமாக நேசித்தால் நாமும் அதுவாகவே மாறிவிடுகிறோம் என்று சொல்வார்கள். எஸ்பிபி சார் கலையின் வடிவமாக இருக்கிறார். எஸ்பிபி சரண், கமல் சார் போன்றோருக்கு எவ்வளவு சோகம் இருக்கிறதோ அதே அளவு என்னைப் போன்ற அவரது கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு இருக்கிறது''.
இவ்வாறு விஜய் சேதுபதி பேசினார்.